சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அசாத்தியமான உலக சாதனைகளைப் படைத்துள்ளது. 


ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி  காரணமாக ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,  சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த  செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.  அக்டோபர் 8ம் தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது. 


இதனிடையே இன்றைய தினம் ஆசிய விளையாட்டு தொடரில் உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி, மங்கோலியா அணியை எதிர்கொண்டது. சீனா நாட்டின் Hangzhou நகரில் உள்ள  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட நேபாளம் அணி, எதிரணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர். 


அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் Kushal Bhurtel, Aasif Sheikh  ஆகிய இருவரும் முறையே 19 மற்றும் 16 ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து களம் கண்ட குஷல் மல்லா மங்கோலியா அணியினருக்கு மரண பயம் காட்டும் அளவுக்கு ருத்ரதாண்டவம் ஆடினார். பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்குமாக பறக்க விட்ட அவர் 34 பந்துகளில் 100 ரன்களை கடந்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 50 பந்துகளில் 12 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 


இதனையடுத்து திபேந்திர சிங் ஐரி ஆடினார். அவரோ குஷல் மல்லாவை விட முரட்டுத்தனமாக ஆடி மாஸ் காட்டினார். 10 பந்துகளை சந்தித்த அவர் 9 பந்துகளிலேயே 8 சிக்ஸர்களுடன் அரை சதம் கடந்து அசத்தினார். இவர்களின் அபார ஆட்டத்தால் நேபாளம் அணி 20 ஓவர்களில் நேபாளம் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 314 ரன்களை குவித்தது. இதுவே 20 ஓவர் போட்டியில் ஒரு அணியின் அதிகப்பட்ச சாதனையாகும். 


இப்படியான நிலையில் இமாலய ஸ்கோரை எதிர்கொண்டு களம் கண்ட மங்கோலியா அணி புயலில் சிக்கிய பொரியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 13.1 ஓவர்கள் விளையாடி 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து நேபாளம் அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டது. 


அதன்படி, 



  • டி20 போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும்.

  • தீபேந்திர சிங் தான் சந்தித்த முதல் ஆறு பந்துகளில் 6 சிக்சர்களை அடித்தார்.

  • குஷால் மல்லா 34 பந்துகளில் 100 ரன்களை கடந்து அசத்தினார். 

  • தீபேந்திர சிங் 9 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார்.

  • மங்கோலியாவை 273 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், டி20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை நேபாளம் பெற்றது.