IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
Border Gavaskar Trophy 2024 : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் தான் ஒப்பனராக களமிறங்குவார் என்று ரோகித் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட்:
அடிலெய்டில் வெள்ளிக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் பேட்டிங்கைத் தொடங்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வதை உறுதிப்படுத்தினார் . ரோஹித் தனது இரண்டாவது குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவு செய்ததால், பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒப்பனராக களமிறங்கிய ராகுல் 77 ரன்கள் எடுத்திருந்தாலும் ராகுல் அடுத்த டெஸ்டில் ஒப்பனராக களமிறங்க மாட்டார் என்று பல ரசிகர்களும் நிபுணர்களும் நினைத்தனர். இருப்பினும், போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த கேப்டன் ரோஹித், தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட மாட்டேன் என்றும் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Highest T20 score : அடேங்கப்பா ஒரே இன்னிங்ஸ்சில் 349.. சின்னப்பின்னமான சிக்கிம்! டி20 வரலாற்றில் பரோடா படைத்த உலக சாதனை
ராகுல் குறித்து ரோகித்:
இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்டில் "கே.எல் ராகுல் தான் தொடக்க ஆட்டக்க்காராக ஜெய்ஸ்வால் உடன் களமிறங்குவார், நான் நடுவில் எங்காவது விளையாடுவேன். அப்படி விளையாடுவது எனக்கு எளிதானது அல்ல, ஆனால் அணிக்கு இது தான் சிறந்தது" என்று ரோகித் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 2018-ல் தொடக்க வீரராக களமிறங்கினார், அதன் பின்னர் தான் அவரின் டெஸ்ட் கேரியரில் ஒரு மாற்றம் ஏற்ப்பட்டது, தற்போது மீண்டும் அணிக்காக தனது இடத்தை மாற்றி ஆடவுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.
6வது இடத்தில் ரோகித்:
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மா ஆறாவது வீரராக விளையாடலாம் என நம்பப்படுகிறது. டிசம்பர் 28, 2018 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். அந்த போட்டியில் அவர் ஒரு அரைசதம் அடித்தார்.
37 வயதான ரோஹித் 16 டெஸ்டில் 25 இன்னிங்ஸ்களில் 54.57 சராசரியுடன் 6வது இடத்தில் 1037 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 3 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடித்துள்ளதால் அவர் இந்த இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.