டி20 கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்கிற சாதனையை சையது முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணி பதிவு செய்தது.
சையது முஷ்டாக் அலி டிராபி:
இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்தியாவின் பல்வெறு நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்தூரில் சிக்கிம் மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பரோடா அணி 20 ஒவர்கள் முடிவில் 349 ரன்களுக்கு குவித்து சாதனை படைத்துள்ளது.
முதலில் களமிறங்கிய பரோடா அணியின் பானு பனியா 51 பந்துகளில் 15 சிக்ஸர்கள் உட்பட 134 ரன்கள் குவித்தார். பரோடா அணியின் துவக்க வீரர்களான ஷஷாங்க் ராவத் (43), அபிமன்யு சிங் (53) முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 92 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த பானு புனியா ஒரு முனையில் பட்டாசாய் வெடித்து ரன்களை குவிக்க, , மற்ற் பரோடா அணி பேட்ஸ்மென்களும் மறுமுனையில் அதிரடியாக ரன்களை குவித்தனர். ஷிவாலிக் சர்மா 17 பந்துகளில் 55 ரன்களும், வி சோலங்கி 16 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் SMAT இல் 300+ ஸ்கோரை பதிவு செய்த முதல் அணி பரோடா ஆனது.
டி20யில் அதிகப்பட்ச ஸ்கோர்:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே 344-4 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 2023ல், நேபாளம் மங்கோலியாவை வீழ்த்தி, 20 ஓவர்களில் 314/3 ரன்கள் எடுத்தது. அக்டோபர் 2024 இல் வங்காளதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 297/6 ரன்கள் எடுத்தது. இப்போது எல்லாம் டி20 கிரிக்கெட்டில் 250 ரன்கள் அடிப்பது என்பது சர்வ சாதரணமாக உள்ளது. அந்த வகையில் தற்போது பரோடா அணி 349 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
அணி | எதிரணி | அடிக்கப்பட்ட ரன்கள் | ஆண்டு |
பரோடா | சிக்கிம் | 349/5 | 2024 |
ஜிம்பாப்வே | காம்பியா | 344/4 | 2024 |
நேபாளம் | மங்கோலியா | 314/3 | 2023 |
இந்தியா | பங்களாதேஷ் | 297/6 | 2024 |
சன் ரைசர்ஸ் ஐதராபாத் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 287/3 | 2024 |
சிக்சரிலும் சாதனை:
இந்த போட்டியில் பரோடா அணி மற்றொரு சாதனையும் படைத்துள்ளது. பரோடா அணி தனது இன்னிங்ஸில் 37 சிக்ஸர்களை அடித்து இருந்தது, இதன் மூலம் டி20 போட்டி வரலாற்றில் இன்னிங்ஸில் ஒன்றில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட சிக்சர்கள் சாதனையாகும். இதற்கு முன்பு காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 27 சிக்சர்களை அடித்து சாதனை படைத்திருந்தது. பரோடா டி20 இன்னிங்ஸில் அதிக 50+ ஸ்கோர்கள் என்ற சாதனையையும் சமன் செய்தது. சிக்கிம் அணிக்கு எதிராக பரோடா அணி வீரர்கள் நான்கு அரைசதங்களை அடித்தனர், இதன் மூலம் ஜிம்பாப்வே காம்பியாவுக்கு எதிராக ஒரே போட்டியில் நான்கு அரைசதங்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளது.