ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இலக்கை எட்டிய இந்திய அணி:
டெல்லியில் நடைபெறும் போட்டியில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான ராகுல் ஒரே ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா, 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 31 ரன்களை சேர்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த கோலியும் நிதானமாக விளையாடி 20 ரன்களை சேர்த்து, மார்ஃபி பந்துவீச்சில் அவுட்டானர். அதேநேரம், சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவரை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் அய்யரும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் பரத் ஆகியோர் பொறுப்புடன் விளையாடிய இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 26.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. புஜாரா 31 ரன்களுடனும், பரத் 23 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. மேலும், தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, இந்திய அணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. தொடரின் முதல் போட்டியும் 3 நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாள் ஆட்டம்:
டெல்லியில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 62 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. ஹெட் 39 ரன்களுடனும், மார்னஸ் லபுசக்னே 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே, இருமுனைகளிலும் சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய அணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால், ஹெட் 43 ரன்களுக்கும், லபுசக்னே 35 ரன்களுக்கும் அட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த ஸ்மித் 9 ரன்களிலும், ரென்ஷா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, கம்மின்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸ்:
டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கவாஜா 81 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 74 ரன்களை சேர்க்க, அவருக்கு உறுதுணையாக கோலி 44 ரன்களையும், அஸ்வின் 37 ரன்களையும், ரோகித் சர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஒரு ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.