IND Vs Aus 2nd ODI: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோகித் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் அரைசதம் விளாசி அசத்தினர்.
ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சார்பில், ரோகித் 73 ரன்களும், ஸ்ரேயாஸ் 61 ரன்களும் மற்றும் அக்சர் படேல் 44 ரன்களும் சேர்த்து அசத்தினர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், பார்லெட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
சொதப்பிய டாப் ஆர்டர்:
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை நீட்டிக்க கட்டாயம் வெல்ல வேண்டிய முனைப்பில் இன்றைய போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், கேப்டன் கில் வெறும் 5 ரன்களுக்கு நடையை கட்ட, அவரை தொடர்ந்து வந்த விராட் கோலி 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் மீண்டும் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால், 17 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது.
மாஸ் காட்டிய மும்பை பாய்ஸ்
இதையடுத்து மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி, அணியை சரிவில் இருந்து வெளிப்படுத்தினர். ரன் ரேட்டும் அதிகரிக்க ரோகித் மற்றும் ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். அதன் தொடர்ச்சியாக ரோகித் 73 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 61 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த கூட்டணி மூன்றாவது விக்கெட்டிற்கு 118 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
கைகொடுத்த டெயில் எண்டெர்ஸ்:
கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், நிலைத்து நின்று ஆடிய அக்சர் படேல் 44 ரன்களை சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக இறுதிக்கட்டத்தில் ஹர்ஷித் ராணா 24 ரன்களையும், அக்ஷர் படேல் 13 ரன்களையும் எடுத்தனர். இதன் விளைவாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்க உள்ள ஆஸ்திரேலிய அணி 265 ரன்களை எட்டி தொடரை கைப்பற்றுமா? அல்லது இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அதகளம் செய்து தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டிப்பார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.