இந்திய கிரி்க்கெட் அணியும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.
சிட்னியில் 705 ரன்கள்:
சிட்னி மைதானமானது இந்திய அணிக்கு ராசியான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை இந்தியா தன்வசம் வைத்துள்ளது. 2004ம் ஆண்டு நடந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளாசிய இரட்டை சதம், லட்சுமணன் விளாசிய சதத்தின் உதவியுடன் இந்திய அணி 705 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் இந்திய அணி 700 ரன்களை கடக்க மற்றொரு இந்திய வீரரும் முக்கிய காரணம். அவருக்கு அப்போது வெறும் 19 வயது மட்டுமே ஆகும். அவர் பார்த்தீவ் படேல். தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனிக்கு முன்பாக இந்திய அணிக்கு கங்குலியால் அழைத்து வரப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல்.
பட்டாசாய் வெடித்த பார்த்தீவ் படேல்:
சிட்னியில் அன்று நடந்த போட்டியில் சச்சின் சதத்தை கடந்து இரட்டை சதத்தை நெருங்கும் வேளையில் வி.எஸ்.லட்சுமணன் அவுட்டாக, கங்குலியும் 16 ரன்களில் அவுட்டாக 6வது விக்கெட்டாக உள்ளே வந்தார் 19 வயதே ஆன பார்த்தீவ் படேல். இந்தியா ஏற்கனவே 570 ரன்களை குவித்திருந்த நிலையில், களமிறங்கியது முதலே பட்டாசாய் வெடித்தார் பார்த்தீவ் படேல்.
2000 காலகட்டத்தில் பாண்டிங் தலைமையில் இருந்த அணியின் அனைத்து பந்துவீச்சாள்களும் அபாயகரமானவர்கள் ஆவார்கள். ப்ரெட் லீ-யைப் பார்த்து அஞ்சாத பேட்ஸ்மேன்களே அன்று இல்லை. ப்ரெட் லீ, கில்லெஸ்பி, நாதன் ப்ராக்கன், மெக்கில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிட்னி மைதானத்தில் சிதறடித்தார் பார்த்தீவ் படேல். அதிரடியாக ஆடி வேகமாகவே அரைசதம் கடந்தார். மறுமுனையில் சச்சினும் இரட்டை சதம் விளாசினார்.
டிரா:
அபாரமாக ஆடிய பார்த்தீவ் படேல் 50 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்திருந்தார். சேவாக், லட்சுமணன், சச்சின் ஆஸ்திரேலியாவை சோதித்த நிலையில் பார்த்தீவ் படேலும் சோதிக்க இந்தியா 705 ரன்களை குவித்தது. லாங்கர், சைமன் கேடிச் ஆஸ்திரேலியாவிற்காக சதம் அடித்தனர். சச்சின் இரண்டாவது இன்னிங்சில் அவுட்டாகாமல் 60 ரன்கள் எடுத்தார். ராகுல் டிராவிட் 91 ரன்கள் எடுத்தார். அந்த போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய அணியின் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் அவரால் சோபிக்க முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 934 ரன்களும், 38 ஒருநாள் போட்டிகளில் ஆடி 736 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 2848 ரன்கள் எடுத்துள்ளார்.