இந்திய அணி – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். அவற்றின் பட்டியலை கீழே காணலாம்.
1.அஸ்வின்
பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக கருதப்படுபவர் அஸ்வின். இந்திய அணியின் மூத்த ஆல்ரவுண்டரான அஸ்வின் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டை கைப்பற்றியபோது அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்தியர் மற்றும் 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
2.ஜடேஜா:
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா இந்த டெஸ்ட் போட்டியில் அசுரத்தனமான ஃபார்முடன் கம்பேக் கொடுத்துள்ளார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து, 5 விக்கெட்டுகளையும் அதிக முறை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அஸ்வின் தன்வசம் வைத்திருந்தார். இந்த டெஸ்ட் மூலம் ஜடஜோ அஸ்வின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 6 முறை இதே சாதனையை படைத்துள்ளனர்.
3.முகமது ஷமி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். முகமது ஷமி இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷமியின் 6 எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் ரன்மெஷின் கிங் கோலியே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 24 சிக்ஸர்கள் மட்டுமே விளாசியுள்ளார். இன்றைய சிக்ஸர்கள் மூலம் முகமது ஷமி விராட்கோலியை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.
4.ரோகித்சர்மா
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பவர் கேப்டன் ரோகித்சர்மா. ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்திய அணிக்காக அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட், டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் 4வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.