ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது.
டாஸ் வென்று பேட்டிங்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ரானா அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் ஏமாற்றம்:
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கினர். மூன்றாவது ஓவரில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்தாக வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறினார்.
ஏமாற்றம் கொடுத்த கோலி:
அடுத்த விராட் கோலி களமிறங்கினர், அனைவரும் கோலியின் மட்டையில் இருந்து ரன்கள் வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோலி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். நீண்ட நேரம் போராடிய கே.எல் ராகுல் 26 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் அவருக்கு நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்த நிலையில் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார், பந்து பேட்டில் பட்டது சரியாக தெரியாத நிலையில் நடுவர் அவுட் கொடுத்தாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
போராடிய பண்ட், நிதிஷ் ரெட்டி:
ஒரு கட்டத்தில் இந்திய அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் அணியை சரிவில் இருந்து மீட்க ரிஷப் பண்ட்டும், நிதிஷ் ரெட்டியும் போராடினர். 7 விக்கெட்டுக்கு இந்த ஜோடி 48 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப் பண்ட் 37 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிதிஷ் குமார் ரெட்டி அதிகப்பட்சமாக 41 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹாசில்வுட் 4 விக்கெட் எடுத்தார்