இடது கை ஆட்டக்காரர்கள் ஆடமுடியாதபடி, பிட்ச்-டாங்கரிங் செய்து அவர்களுக்கு தகுந்தாற்போல் வைத்துக்கொண்டர்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் குற்றம் சாட்டி வந்தனர். இந்தியாவின் ஒரே இடது கை ஜோடியான ஜடேஜா-அக்ஸர் இருவருமே அரைசதம் கடந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவர் வாயையும் அடைத்த நிலையில், இது குறித்து பேசிய அக்ஸர் படேல், ஆஸ்திரேலிய மீடியாக்களை கலாய்த்துள்ளார். 


பார்டர்- கவாஸ்கர் டிராஃபி


இந்திய அணியின் பவுலிங் ஆல்-ரவுண்டர் அக்ஸர் பட்டேல், ஆட்டமிழக்காமல் 102 பந்துகளில் 52 ரன்கள் குவிக்க, அவ்வபோது அடித்து ஆடிய ஜடேஜாவும் நிலைத்து ஆடி 170 பந்துகளுக்கு 66 ரன்கள் குவிக்க இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் டாப் ஆர்டரையே அசைத்து பார்த்த ஆஸ்திரேலிய அணி பவுலிங்கால் இந்த இடது கை ஆல்-ரவுண்டர்கள் ஜோடியை வீழ்த்தமுடியாமல் திணறினர். ஆஸ்திரேலிய ஊடகங்களும், ஆஸ்திரேலிய அணியின் முன்னர் வீரர்களும் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பில் இருந்தே இந்தியா மைதானங்களை சுழலுக்கு ஏற்றவாறு அமைத்து வருகிறது என்ற பேச்சு இருந்தது. முதல் இன்னிங்சில் சுழல் தாங்க முடியாமல் விக்கெட்டுகள் சரிய அந்த பேச்சு இன்னும் அதிகமானது.



பிட்ச்-டாங்கரின்


குறிப்பாக பிட்ச்-டாங்கரின் செய்ததாக ஆஸ்திரேலிய ஊடங்கங்கள் கூறின. அதாவது பிட்சில் இடது கை ஆட்டகாரர்களாக ஆடுபவர்களுக்கான பக்கத்தில் மட்டும் காய்ந்த பிட்சை தயார் செய்ததாக கூறப்பட்டது. ஏனெனில் இந்தியாவில் டாப் ஆர்டரில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவில் 4 முக்கிய வீரர்கள் இடது கை ஆட்டக்காரர்கள் என்பதால் இது போன்ற பிட்ச்களை தயார் செய்து சுழல் மூலம் வீழ்த்துகின்றனர் என்று பேசி வந்தனர். அதிலும் வார்னர் நான் 'வலது கை பேட்ஸ்மேனாக ஆடப்போகிறேன்', என்றெல்லாம் கூறியதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்தியாவின் முக்கிய வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், புஜாரா, ஆகியோரை இளம் ஸ்பின்னர் டாட் மர்ஃபி வீழ்த்தினார். இவர்கள் அனைவருமே வலது கை ஆட்டக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: IND vs AUS 1st Test: மிரட்டிய ரோகித்.. அசத்திய ஜடேஜா, அக்‌ஷர்..! 300 ரன்களை கடந்த இந்தியா- ஆஸி.க்கு நெருக்கடி?


பேட்டால் பதில் சொன்ன அக்ஸர்-ஜடேஜா


ஆனால் தொடர்ந்து வந்த இந்தியாவின் இரண்டே இரண்டு இடது கை ஆட்டகாரர்களான ஜடேஜாவையும், அக்சரையும் வீழ்த்த முடியாமல் இரு ஸ்பின்னர்களும் திணற, பார்ட்-டைமராக லபுஷேனும் வந்து பந்து வீசினார். ஆனாலும் பலன் இல்லை. இவர்கள் இருவருமே பவுலிங் ஆல்-ரவுண்டர்கள் என்பதுதான் அதில் குறிப்பிடத்தக்கது. சிறிய தடுமாற்றம் கூட இன்றி இருவரும், உலகின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் போல, நேர்த்தியாக ஆட்டத்தை நகர்த்தி சென்றதுதான் அதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். ஆஸ்திரேலியாவின் மொத்த குற்றச்சாட்டுகளையும் இரண்டாம் நாளில் தவிடுபடியாக்கி இரண்டு இடது கை ஆட்டக்காரர்களும் தங்கள் மட்டையால் பதில் கூறினர். ஆனால் அக்ஸர் பட்டேல் அதோடு நிறுத்தவில்லை. பேட்டியின்போதும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 



கலாய்த்த அக்ஸர் படேல்


அக்ஸர் படேல் இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பின் ஒளிபரப்பாளர்கள் அவரை நேர்காணல் செய்தபோது, ஆஸ்திரேலிய மீடியாக்களை வஞ்சப்புகழ்ச்சியாக தாக்கினார், "நாளை, நாங்கள் பேட்டிங் செய்யும் நேரம் வரை பிட்ச் நன்றாக இருக்கும், அதன் பிறகு அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும்", என்று கூறி பிட்ச்-டாங்கரிங் செய்ததாக குற்றம் சாட்டி வந்த ஆஸ்திரேலிய மீடியாக்களை கலாய்த்தார். அவரது பேட்டிங் பற்றி பேசிய அக்ஸர், அவர் தனது பேட்டிங்கை மேம்படுத்த வேலை செய்ததாகவும், அவரது நுட்பம் குறித்து எப்போதும் அறிந்திருப்பதாகவும் கூறினார். "கடந்த ஒரு வருடமாக பேட்டிங்கில் முன்னேற பயிற்சி செய்து வருகிறேன். களத்திலும் அந்த நம்பிக்கை கைகூடி வருகிறது. எனது நுட்பம் நன்றாக இருந்தது என்று எனக்கு எப்போதும் தெரியும். நீங்கள் பேட்டிங் செய்யச் செல்லும்போது அந்த ஆடுகளத்தில் சில சிரமங்கள் இருக்கலாம், ஆனால் கொஞ்ச நேரம் அங்கு இருந்த பின்பு அது எளிதாகிறது. சிறிது நேரம், கவனத்தை இழக்காமல் இருக்க ஜடேஜாவுடன் பேசினேன்," என்று அக்ஸர் மேலும் கூறினார்.