இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது ஜடேஜா பறந்து பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 188 ரன்கள் சேர்த்த நிலையில் நிலையில் ஆல்-அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, மெல்ல மெல்ல மீட்ட கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜா கூட்டணி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டதுடன், அட்டாக்கிங் ஸ்டைலில் பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். 


இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ராகுல் 75 ரன்களுடனும் ஜடேஜா 45 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். மூன்று போட்டிகள்கொண்ட தொடரில் இந்திய அணி 1 -0 என முன்னிலை வகிக்கிறது.  இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீசிக் கொண்டு இருந்த போது 23வது ஓவரை குல்தீப் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர் கொண்ட லாபுசேன் பந்தை  ஆஃப் சைடில் தூக்கி அடித்தார். 






அப்போது ஆஃப் சைடில் இன் சர்க்கிளில் பீல்டிங் செய்துகொண்டு இருந்த ஜடேஜா திடீரென அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்தார். இதனை யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், ஆஸ்திரேலியாவின் லபுசேன் 22 பந்தில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். தற்போது ஜடேஜா பிடித்த கேட்ச் இணையத்தில் வீடியோவாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது.