இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. இந்திய-ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வில் இருந்த விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடினர். இந்தநிலையில் ஆப்கானிச்தானுக்கு எதிரான டி20 போட்டிக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இந்த இரண்டு வீரர்கள் களமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு..? 

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, பிசிசிஐ இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கலாம். இன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான தொடரிலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யலாம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பைக்காக தயாராகும். எனவே இதை மனதில் வைத்து கோலியும் ரோஹித்தும் இந்திய டி20 அணிக்கு திரும்பலாம். இந்த இரு வீரர்களும் நீண்ட நாட்களாக இந்திய டி20 அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் 1 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார். எனினும் இவை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கப்படலாம். இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளிக்கலாம். கேப்டவுன் டெஸ்டில் இந்திய அணிக்காக சிராஜ் மற்றும் பும்ரா முக்கிய பங்கு வகித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி இந்தூரில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் ஜனவரி 17ம் தேதி நடக்கிறது.

இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்: 

இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் மோதியுள்ளது. இந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 

ஆப்கானிஸ்தான் டி20 போட்டிகளுக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி: 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், தீபக் சாஹர்

போட்டி அட்டவணை:

போட்டிகள்   தேதி & நேரம் (IST)   இடம்
  1வது டி20ஐ   11 ஜனவரி, 07:00 PM   பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா
  ஸ்டேடியம், மொஹாலி
  2வது டி20ஐ   14 ஜனவரி, 07:00 PM   ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர்
  3வது டி20ஐ   17 ஜனவரி, 07:00 PM   எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு