வெற்றி முனைப்பில் இந்திய அணி:


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்நிலையில் தான் இரண்டாவது டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (ஜனவரி 14) நடைபெறுகிறது.  1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.


 


அதேநேரம் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றிக்காக போராடும். இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி இந்த ஆட்டத்தில் களம் இறங்குவார். கடந்த 14 மாதங்களுக்கு பின்னர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் உற்சாகாமடைந்துள்ளனர். முக்கியமாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இணைந்து விளையாடுவதால் பேட்டிங்கிற்கு வலுசேர்ப்பார்கள்.


 


அதேபோல், ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கை பொறுத்த வரை அந்த அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது அபி ஆகியோரும், பந்து வீச்சை பொறுத்த வரை முஜிப் ரஹ்மான் , பஷல் ஹக் பரூக்கி மற்றும் நவீன் உல்ஹக் வலுவாக இருக்கிறார்கள். அதனால் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் அந்த அணி செயல்படுத்தும்.


 


நேருக்கு நேர்:


 


இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 5 போட்டிகளில் இந்திய அணை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெற்றி பெறமால் பரிதாப நிலையில் தான் இருக்கிறது.


 


ஒளிபரப்பு:


இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக பார்க்கலாம்.


 


இந்தூர் மைதானம்:


இந்தூர் மைதானத்தில் சர்வதேச டி 20 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டி விளையாடி இருக்கிறது. இதில், 2 போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியையும் பெற்றிருக்கிறது. கடைசியாக இங்கு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆட்டத்திலும் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவும் ஆட்டத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.