ஏசிசி ஆடவர் ஆசியக் கோப்பை 2023 தொடரின் 12வது போட்டியில் இந்தியா ஏ அணியும், பாகிஸ்தான் ஏ அணியும் மோதி வருகின்றனர். இந்த போட்டியானது இலங்கையில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. 


முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் களமிறங்கினர். 


பாகிஸ்தான் அணி 9 ரன்களை எடுத்திருந்தபோது 11 பந்துகளை சந்தித்த சைம் அயூப் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்ததாக உள்ளே வந்த உமைர் யூசுப்பும் 0 ரன்களில் நடையைக்கட்டினார். 


தொடர்ந்து உள்ளே வந்த பின் வரிசை வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் அளிக்க, காசிம் அக்ரம் மட்டும் தனியாக போராடி கொண்டிருந்தார். 


அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட காசிம் அக்ரம் 48 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  205 ரன்கள் மட்டுமே எடுத்தது. 






பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்களும், முபாசிர் கான் 28 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் ஹங்கர்கேகர் 5 விக்கெட்களும், மானவ் சுதர் 3 விக்கெட்களும், ரியான் பராக் மர்றும் நிஷாந்த் சந்த் தலா 1 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். 


206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை சாய் சுதர்சன் தனது பாணியில் வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். 






அடுத்து களமிறங்கிய நிகின் ஜோஸ் 64 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின் வரிசையில் வந்த கேப்டன் யாஷ் துல் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 110 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். 


36.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு  210 ரன்கள் எடுத்து இந்தியா ஏ அணி வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் சாய் சுதர்சன் 110 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.