Rohit Sharma: இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து கொண்டு இருந்தாலும், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு தொடர். இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி அளவிலான போட்டித் தொடர் என்பதால் மிகவும் கவனம் பெற்றுள்ளது. காரணம் இன்னும் ஒருமாதத்திற்கு பின்னர் அதாவது அக்டோபர் மாதம் துவக்கத்தில் அதாவது 5ஆம் தேதி உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 


இதனால், இந்திய அண்யின் ஆட்டம் இந்த தொடரில் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் காண கிரிக்கெட் உலகம்  ஆவலாக உள்ளது. இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கு தயாராவதற்காக இந்திய அணி ஏற்கனவே பெங்களூரில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியுடன் இன்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி இணைந்துள்ளார் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் சர்மா. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரோகித் சர்மா கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, நான் எப்படி என்னை நிதானமாக வைத்துக்கொள்கிறேன் என்பது முக்கியம், நேர்மறையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிப்புற காரணிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். 




2019 உலகக் கோப்பைக்கு முன் நான் இருந்த நிலைக்குச் செல்ல விரும்புகிறேன்.  அப்போதுதான் நான் நல்ல நிலையில், நல்ல மனநிலையில் இருந்தேன். நான் அதை மீண்டும் கொண்டு வர விரும்புகிறேன், அதைச் செய்ய எனக்கு நேரம் இருக்கிறது. 2019 உலகக் கோப்பைக்கு முன்பு ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் நான் செய்த சரியான விஷயங்கள் என்ன என்பதை நினைவுபடுத்த முயற்சிக்கிறேன். என்னுடைய அந்த சிந்தனை செயல்முறையை நான் தனிப்பட்ட முறையில் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன். மேலும், இந்த அணியைக் கொண்டு அடுத்த இரண்டு மாதங்களில் நல்ல நினைவுகளை உருவாக்க முயற்சிப்பேன்" என தெரிவித்துள்ளர். 




கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ரோகித் சர்மா 5 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 648 ரன்கள் குவித்திருந்தார். மேலும் அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ரோகித் சர்மா என்ற பெருமையைப் பெற்றார். 


கடந்த வாரத்தில் கூட இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர ஷேவாக் ரோகித் சர்மா குறித்து தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், இம்முறை உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், இந்திய மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும் என்பதால் தொடக்க ஆட்டக்காரர்களால் அதிக ரன்கள் குவிக்க முடியும் எனவும் சேவாக் கூறியுள்ளார். 


இந்நிலையில் ரோகித் சர்மா இவ்வாறு கூறியுள்ளது அவர் தனது ஓய்வை சூசகமாக அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் புகைச்சலைக் கிளப்பியுள்ளன. ஆனால் ரோகித் சர்மா இந்தியாவுக்காக 2 முதல் மூன்று உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த பின்னர்தான் ஓய்வு பெறுவேன் என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.