ரோஹித்தின் பாராட்டை பெற்ற திலக் வர்மா:
இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா. இவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,"இந்திய அணியின் 3 வடிவங்களிலும் விரைவாக இடம்பிடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உள்ளவர்"என்று பாராட்டி இருந்தார். ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதானல் இந்திய டி20 அணியிலும், ஆசிய கோப்பையிலும் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து இந்திய அணியில் இவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையில் இந்திய எ அணியில் இடம் பிடித்து இருந்தார். ஆனால் இதல் முதல் போட்டியில் ப்ளேயிங்க் லெவனில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இச்சூழலில் இது தொடர்பாக திலக் வர்மா பேசியுள்ளார். அதில், "கடந்த ஆண்டில் இருந்து பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது அந்த பயிற்சி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஏனென்றால் ரெட் பாலில் சிறப்பாக பவுலிங் செய்ய பணியாற்றி வருகிறேன். ஆல்ரவுண்டராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் போது, ஒயிட் பால் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த ஆட்டத்தை எளிதாக வெளிப்படுத்த முடியும்.
செலக்ஷன் ஆட்டம் தான்:
அதன் காரணமாகவே அதிகளவில் வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வருகிறேன். துலீப் டிராபியை பொறுத்தவரை ஒவ்வொரு வீரருக்கும் செலக்ஷன் ஆட்டம் தான். துலீப் டிராபி மிகமுக்கிய தொடர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கும் ஒரு அணியின் அங்கமாகவே நாம் செயல்படுகிறோம். நாம் விளையாடும் அணிக்காக அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்து, அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். சொந்த சாதனைகளுக்காக சுயநலமாக விளையாடாமல், அணியை முன்னிறுத்தி விளையாடும் வெற்றிபெற்றால், இந்திய அணியின் கதவுகள் நிச்சயம் திறக்கப்படும்"என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,"சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை உள்ளூர் போட்டிகளை விடவும் கொஞ்சம் கூடுதல் வேகத்தில் பந்துகள் வரும். அதற்கு தகுந்தவாறு நாம் விரைவாக தகவமைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்திய அணியில் செட்டிலாக நேரம் கிடைக்காது. நாம் நினைப்பதை விடவும் கூடுதலாக சிறப்பாக செயல்பட வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இருவருமே கூடுதல் முதிர்ச்சியுடன் இருப்பார்கள். ஏனென்றால் அங்கு அனுபவம் கொட்டி கிடக்கும். அதனை இளம் வீரராக நாம் சமாளித்து சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். அதுதான் இளம் வீரர்களுக்கு சவாலான விஷயம்" என்று திலக் வர்மா கூறியுள்ளார்.