ஜிம்பாப்வேயில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் அணியில் களமிறங்க உள்ளனர். இந்தத் தொடரில் விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். 


இந்நிலையில் விராட் கோலி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில விளையாட்டு தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “நான் விராட் கோலியிடம் தற்போது பேசவில்லை. கிரிக்கெட் உலகில் அனைத்து வீரர்களும் இதை சந்தித்திருப்பார்கள். இதில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்று அவருக்கு தெரியும். 


மேலும் இந்த ஓய்வு காலத்தில் அவர் எதை சரியாக செய்யவில்லை என்று நினைத்து பார்க்க முடியும். அத்துடன் அவருடைய மனமும் சற்று சோர்வில் இருந்து மீண்டு வரும். அப்போது இனி வரும் காலத்தில் எதை செய்ய வேண்டும் என்று எளிதாக தேர்வு செய்ய முடியும். அவர் அப்போது சிறப்பாக விளையாட முடியும். அத்துடன் அவர் ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் அரைசதம் கடந்துவிட்டால் அவர் பற்றி பேசிய அனைவரும் தங்களுடைய வாயை மூடிவிடுவார்கள். மேலும் இதற்கு முன்பாக நடந்த அனைத்து விஷயங்களையும் அவர்கள் மறந்துவிடுவார்கள். ஏனென்றால் ரசிர்கள் சில விஷயங்களை விரைவில் மறந்துவிடுவார்கள்” எனக் கூறியுள்ளார். 


பாகிஸ்தான் அணிக்கு எதிரான விராட் கோலி 7 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்தப் போட்டிகளில் 311 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 அரைசதம் விளாசியுள்ளனர். 


விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கடந்த ஒராண்டாக விராட் கோலி தொடர்பாக ரசிகர்கள் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு தற்போது 33 வயது தான். தற்போதுள்ள வீரர்களில் அவர் ஒரு சிறப்பான வீரர். அத்துடன் ஒருநாள்,டெஸ்ட், டி20 உள்ளிட்ட அனைத்து வகை பிரிவுகளிலும் இவர் 50க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ளார். இந்தியாவில் சிறந்த ஃபில்டர்களில் ஒன்றாக அவர் இப்போதும் ஃபிட்டாக உள்ளார். 




ஒரு வீரரின் ஃபார்ம் நிரந்தரமானதில்லை. ஆனால் அவருடைய கிளாஸ் எப்போதும் நிரந்திரமான ஒன்று. விராட் கோலி அப்படிபட்ட வீரர். அவர் மீண்டும் திரும்பி ஃபார்மிற்கு வருவார். ஆனால் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்மிற்கு வரக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். 


கங்குலியின் கருத்து:


விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “விராட் கோலி ஒரு சிறப்பான வீரர். அவருக்கு தற்போது தேவை அதிகமான போட்டிகளில் விளையாடுவது தான். அவர் நல்ல பயிற்சி செய்தால் மீண்டும் சதம் அடிப்பார். அவர் வரும் ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் சதம் அடிப்பார்” எனத் தெரிவித்துள்ளார். 


ஜெய்வர்தனேவின் ஆதரவு:


முன்னதாகஇந்தியாவின் ஆசிய கோப்பை தொடருக்கான அணி தொடர்பாக முன்னாள் இலங்கை கேப்டன் மகேலா ஜெயவர்தனே கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐசிசியின் ரிவ்யூ நிகழ்ச்சியில் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “விராட் கோலி தற்போது ஒரு மோசமான ஃபார்மை சந்தித்து வருகிறார். அவர் ஒரு சிறப்பான வீரர். இதுபோன்ற இகட்டான தருணங்களில் எப்படி மீண்டு வர வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் இதுபோன்று ஏற்கெனவே செய்துள்ளார். ஆகவே அதேபோன்று மீண்டும் வருவார். ஒரு வீரரின் ஃபார்ம் நிரந்தரமானதில்லை. ஆனால் அவருடைய கிளாஸ் எப்போதும் நிரந்திரமான ஒன்று. எனவே நிச்சயம் மீண்டு வருவார்.