50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 5-ந் தேதி  இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவிற்கு மற்ற நாட்டு அணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்குகிறது.


நியூசிலாந்து - பாகிஸ்தான்:


இன்று மொத்தம் 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இதற்காக இரு நாட்டு அணிகளும் ஹைதரபாத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டனர். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 7 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் ஆடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்திய மண்ணில் ஆடுவது இதுவே முதன்முறை ஆகும்.


வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கடந்த 2 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்ற பெருமையை கொண்ட அணியாகும். அவர்களுக்கு இந்திய மண்ணில் ஆடிய அனுபவம் நிரம்ப இருப்பதால் அவர்களுக்கு இந்திய மண்ணில் ஆடுவது சுலபமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரு அணிகளிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்களும், தரமான பேட்ஸ்மேன்களும் இருப்பதால் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


இலங்கை - வங்கதேசம்:


கவுகாத்தியில் நடைபெறும் மற்றொரு போட்டியில் இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் மோதுகின்றன. ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், மெகிதி ஹாசன், முஸ்தபிஷூர், முஷ்பிகுர் ரஹீம் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர்.  ஆசிய கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி உற்சாகத்தில் வங்கதேச வீரர்கள் இன்றைய போட்டியில் இறங்குவார்கள் என்று நம்பலாம்.


இலங்கை அணி இந்த பயிற்சி போட்டியை புதிய உத்வேகத்துடன் ஆடுவார்கள் என்று நம்பலாம். ஏனென்றால், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய பரிதாபத்துடன் வெளியேறிய இலங்கை அணி உலகக்கோப்பையில் புதிய தன்னம்பிக்கையுடன் ஆடுவார்கள் என்று நம்பலாம்.


தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்:


திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணி மோதுகின்றன. தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்றாலும், மிகவும் ஆபத்தான அணி அவர்கள் ஆவார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தங்களது பலத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால், உலகக்கோப்பை தொடருக்கும் அசுரபலத்துடனே தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளனர்.


ஆப்கானிஸ்தான் அணி சமீபகாலத்தில் மிகவும் அபாயகரமான அணிகளில் ஒன்றாக உள்ளது.  ஹஸ்மதுல்லா ஷாகிதி தலைமையில் களமிறங்க உள்ள ஆப்கான் அணியில் ஜட்ரான், ரஹ்மத்ஷா, ஜட்ரான், முகமது நபி, ரஷீத்கான், முஜிப் உர் ரஹ்மான், பரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோர் முக்கிய வீரர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம் தலைமையில் குயின்டின் டி காக், ஹென்ட்ரிக்ஸ், கிளாசென், டேவிட் மில்லர், நிகிடி, ரபடா முக்கிய வீரர்களாக உள்ளனர்.


இந்த பயிற்சி ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.