2023 உலகக் கோப்பைக்கான அட்டவணை ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது வெளியிடப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியா முழுவதும் உள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இடங்களின் பட்டியலை கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது. அதோடு இறுதிப் பட்டியலை விரைவில் ஐசிசியுடன் பகிரும் என்று கூறப்பட்டுள்ளது.


ஊடக சந்திப்பில் ஜெய் ஷா


ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் இறுதிப் போட்டியை நடத்தும் அகமதாபாத்தில் பிசிசிஐயின் சிறப்பு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜெய் ஷா இந்த கருத்துக்களை தெரிவித்தார். பத்து அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ள நிலையில், பிசிசிஐ இன்னும் அட்டவணையை இறுதி செய்யவில்லை. போட்டித் தொடங்குவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்படத்தக்கது.



எந்தெந்த ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன?


மூன்று நாக் அவுட் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் 46 நாட்களில் நடைபெற உள்ளன. அதிக இருக்கை வசதி கொண்ட அகமதாபாத் ஒருபுறம் இருக்க, BCCI பட்டியலில் உள்ள நகரங்களின் பட்டியல்: பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை, திருவனந்தபுரம், நாக்பூர் மற்றும் புனே ஆகிய நகரங்களும் பரிசீலனையில் உள்ளன. லீக் போட்டிகள் 10 நகரங்களில் நடத்தப்படும் என்றும், இரண்டு நகரங்களில் முக்கிய போட்டிக்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Prize Money: கோப்பையை வெல்லப்போகும் அணிக்கு இத்தனை கோடியா? 25 சதவிகிதம் உயர்த்த திட்டம்!


ஆசியகோப்பை குறித்த விவாதம்


ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரான ஜெய் ஷா, 2023 ஆசிய கோப்பைக்கு பிசிபி முன்மொழிந்த கலப்பின மாடல் (hybrid model) சாத்தியமா என்பதை இறுதி செய்ய ஏசிசியின் அவசர கூட்டம் நடைபெறும் என்றார். ஞாயிற்றுக்கிழமை, ஜெய் ஷா இலங்கை கிரிக்கெட், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றில் உள்ள தனது சகாக்களை சந்தித்து ஆசிய கோப்பை குறித்த தங்கள் கருத்துக்களை அதிகாரப்பூர்வமாக விவாதிக்க இருக்கிறார். ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் நேபாளத்துடன் குரூப் ஒன்றில் இணைந்துள்ளன. இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ளன.



ஏசிசி கூட்டத்தில் முறையாக விவாதிக்கப்படும்


ஆசியக்கோப்பைக்கு இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்த நிலையில், பிசிபி ஆறு அணிகள் கொண்ட போட்டியை இரு நாடுகளில் சேர்த்து நடத்தும்படி ஹைப்ரிட் மாடலை பரிந்துரைத்தது. அதாவது அதில் நடக்கும் 13 போட்டிகளில் நான்கு பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் மீதி போட்டிகளை விரும்பும் நாடுகளில் நடத்தலாம் என்றும் கூறியுள்ளது. ஹைப்ரிட் மாடலின் மிகப்பெரிய சவால், அதில் ஈடுபடும் பயணம்தான். "இரண்டு அல்லது மூன்று நாடுகள்" தங்கள் கருத்துக்களை அனுப்பியுள்ளதாக ஜெய் ஷா கூறினார், இது அடுத்த பத்து நாட்களில் ACC கூட்டத்தில் முறையாக விவாதிக்கப்படும் என்றார். மேலும் ஜெய் ஷா கூறுகையில், ஏசிசி தலைவர் என்ற முறையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர வேண்டும் என்று விரும்பினேன். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் பாகிஸ்தானிலோ அல்லது இந்தியாவிலோ நடத்தப்படவில்லை," என்று கூறினார்.