IND Vs SA W World Cup: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க முடியும்.

Continues below advertisement

இந்தியா - தென்னாப்ரிக்கா:

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவும், ஐந்தாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா அணிகளும் மோத உள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

Continues below advertisement

இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் எளிதில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க முடியும். எனவே, ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், தென்னாப்ரிக்கா அணியோ இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் நீடிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது தென்னாப்ரிக்கா அணிக்கு அவசியமாகும்.

இந்தியா - தென்னாப்ரிக்கா - பலம், பலவீனம்

இந்திய அணி பேட்டிங்கில் சற்றே தடுமாறினாலும்,பந்துவீச்சில் தொடர்ந்து அசத்தி வருகிறது. குறைகளை நிவர்த்தி செய்ய டாப் ஆர்டர் வீராங்கனைகள் ரன்கள் சேர்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காதது அணிக்கு பெரும் பலவீனமாக கருதப்படுகிறது. மறுமுனையில் தென்னாப்ரிக்க அணியோ, முதல் போட்டியில் இங்கிலாந்திடம் பேட்டிங்கில் சொதப்பினாலும், இரண்டாவது போட்டியில் அபாரமாக செயல்பட்டது. அதே ஃபார்மை அப்படியே தொடர்ந்தாலே, இன்றைய போட்டியில் இந்தியாவிற்கு நெருக்கடி அளிக்கக் கூடும்.

இந்தியா - தென்னாப்ரிக்கா: நேருக்கு நேர்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 20 முறையும், தென்னாப்ரிக்கா 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 337/9, தென்னாப்ரிக்கா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 80/10 ஆகும்.

மைதானம் எப்படி?

விசாகப்பட்டினம் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானதாக கருதப்படுகிறது. நேரம் செல்ல செல்ல ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த உதவும். இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 230 ரன்களாக உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும்.

உத்தேச பிளேயிங் லெவன்

இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(வி,கீ), தீப்தி சர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர்

தென்னாப்பிரிக்கா: லாரா வோல்வார்ட்(கே), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சினாலோ ஜாஃப்டா(வி.கீ), க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மசபாடா கிளாஸ், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா