ஐசிசி யு-19 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் 3ஆவது விக்கெட்டிற்கு ரகுவன்சி-ராஜ் பாவா ஜோடி 206 ரன்கள் குவித்து அசத்தியது. கடைசி வரை அதிரடி காட்டிய ராஜ் பாவா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 108 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 162* ரன்கள் எடுத்தார்.

  


அத்துடன் அவர் இந்திய வீரர் ஷிகர் தவானின் 18 ஆண்டுகால சாதனையையும் தகர்த்தார். இந்நிலையில் இந்த ராஜ் பாவா எப்படி கிரிக்கெட் விளையாட்டிற்கு நுழைந்தார்? அவருடைய ஐகான் வீரர் யார் ?


ராஜ் அங்கட் பாவாவின் குடும்பம் சந்தீகர் பகுதியைச் பூர்வீகமாக கொண்டது. இவருடைய தாத்தா தர்லோசன் பாவா 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இவர் 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம் பிடித்திருந்தார். அவருடைய தாத்தா ராஜ் பாவாவிற்கு 4 வயதாக இருக்கும் போது உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து தன்னுடைய தாத்தாவின் ஒலிம்பிக் பதக்கத்தை பார்க்கும் போது எல்லாம் இவருக்கு விளையாட்டு போட்டியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. 


ராஜ் பாவாவின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். இதனால் விளையாட்டு வீரர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறந்ததால் ராஜ் பாவாவும் விளையாட்டை தேர்வு செய்தார். சிறு வயதில் இவருடைய தந்தையுடன் யுவராஜ் சிங் பயிற்சி செய்வதை இவர் பார்த்து மகிழ்ந்துள்ளார். அதன்காரணமாக யுவராஜ் சிங் போல் ஆட வேண்டும் என்று தன் கையில் பேட்டை எடுத்துள்ளார். அவரை போல் முதலில் பேட்டிங் செய்ய பழகியுள்ளார். அதன்பின்னர் பந்துவீசுவதிலும் இவருக்கு ஆர்வம் வந்துள்ளது. 




இடது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்துவீச்சு என இரண்டிலும் அசத்த தொடங்கியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிதன் மூலம் ஹிமாச்சலப்பிரதேச அணியின் யு-19 அணியில் இடம்பெற்றார். அதிலும் சிறப்பாக விளையாடி இந்திய யு-19 அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்திய அணியில் இடம்பெற்ற உடன் அவர் 12ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவருடைய தாத்தாவின் பிறந்தநாள் 12ஆம் தேதி மற்றொன்று அவருடைய ஐகான் யுவராஜ் சிங்கும் 12ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். 


ஷிகர் தவானின் சாதனை முறியடித்தல்:


நேற்றைய போட்டியில் இவர் 162* ரன்கள் அடித்ததன் மூலம் யு-19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ராஜ் பாவா பெற்றுள்ளார். இதற்கு முன்பாக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர் ஷிகர் தவான் கென்யாவிற்கு எதிரான போட்டியில் 155 ரன்கள் அடித்திருந்தார். அந்த ஸ்கோரை தற்போது ராஜ் பாவா முறியடித்துள்ளார். 18 ஆண்டுகளாக இருந்த ஷிகர் தவான் ரெக்கார்டை இவர் உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: யு-19 உலகக்கோப்பை: சத்தமில்லாமல் கெத்துக் காட்டும் இந்தியா.. நடப்புச் சாம்பியனுடன் காலிறுதி!