ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பை போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் நடைபெறும் 21வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் நியூசிலாந்து அணி உற்சாகத்துடன் களமிறங்கும்.


அதேசமயம், ஏற்கனவே இங்கிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது. டி20 போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.




மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். நியூசிலாந்து அணியில் கடந்த போட்டியில் அசத்திய ஃபின் ஆலன், கான்வே இந்த போட்டியிலும் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும், வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், நீஷம் ஆகியோர் பேட்டிங்கில் அசத்துவார்கள் என்று நம்பலாம், பந்துவீச்சில் சான்ட்னர், சவுதி, போல்ட் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


கடந்த போட்டியில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த போட்டியில் புத்துணர்ச்சியுடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் ஆப்கானிஸ்தான் அணி மீது ஒருவித அச்ச உணர்வு இருந்து கொண்டே உள்ளது. அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள்.




அந்த அணியின் ஷசாய், குர்பாஸ், ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான் பேட்டிங்கில் அசத்தும் திறமை வாய்ந்தவர்கள். முகமது நபி, ரஷீத்கான், முஜீப் உர் ரஹ்மான், பரூக்கி பந்துவீச்சில் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ரஷீத்கான் மற்றும் கேப்டன் முகமது நபி ஆல் ரவுண்டர்களாகவும் ஜொலிக்கும் வல்லமை கொண்டவர்கள். இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.