ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முறை டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்தச்சூழலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த உலகக் கோப்பை தொடரை போல் இம்முறையும் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் தகுதி சுற்றில் இலங்கை, நமீபியா, ஸ்காட்லந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் விளையாட உள்ளனர். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது.
சூப்பர் 12 சுற்றில் முதல் குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் இடம்பெறுள்ளன. அதேபோல் இரண்டாவது குரூப்பில் இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அதேபோல் இம்முறையும் டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை அடந்த தோல்விக்கு இம்முறை இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: முரண்பட்ட கருத்துகள்... கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப இருந்த கங்குலி... பூதாகரமாகும் கேப்டன்சி சர்ச்சை