2021 டி-20 உலகக்கோப்பை தொடரில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர் ஷமிதான் காரணமென சமூகவலைதளத்தில் கண்டனத்துக்குரிய வகையில் விமர்சனங்கள் பதிவானது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் ஷமிக்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 18வது ஓவரின் கடைசி பந்திலே எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக, 18 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது 18வது ஓவரை வீசிய முகமது ஷமி வீசிய முதல் 5 பந்திலே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று போட்டியை முடித்தது. 


இதனால், இந்த தோல்விக்கு காரணம் முகமது ஷமிதான் என்று சமூக வலைதளங்களில் அவர்மீது வெறுப்பான கருத்துகள் வீசப்பட்டது. குறிப்பாக, சிலர் அவரது மதத்தை குறிப்பிட்டு கண்டனத்துக்குரிய வகையில் விமர்சனங்களை பதிவிட்டனர். இந்நிலையில், ஷமி மீதான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தும், ஷமிக்கு ஆதரவு தெரிவித்தும் முன்னணி கிரிக்கெட் பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர்.






இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 79* ரன்கள் குவித்த ரிஸ்வான், ”பல அழுத்தங்கள், நெருக்கடிகள், தியாகங்களை தாண்டிதான் ஒரு வீரர் தேசத்துக்காக விளையாடி வருகிறார். முகமது ஷமி ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். உங்கள் நாட்டு நட்சத்திரங்களை மதியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விளையாட்டு மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வர வேண்டுமே தவிர பிரிவை உண்டு பண்ணக்கூடாது” என பதிவிட்டுள்ளார்.






ரிஸ்வானின் இந்த பதிவு, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஷமிக்கு ஆதரவாக பிசிசிஐ, சச்சின், சேவாக், இர்பான் பதான் உள்ளிட்டோர் தரப்பில் இருந்து குரல் கொடுத்த நிலையில், தற்போதைய இந்திய கேப்டன் கோலி, மற்ற வீரர்கள் மெளனம் காப்பது வருத்தத்தை தருகிறது. தற்போது விளையாடி வரும் இந்திய அணி வீரர்களும் குரல் கொடுத்தார்கள் எனில், இது போன்ற சம்வங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான வாய்ப்பாக அமையும், அணியின் ஒற்றுமை வலுவாகும்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண