உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பிரதான சுற்றான சூப்பர் 12 போட்டிக்கு குரூப் பி பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் தகுதி பெற்ற நிலையில், குரூப் ஏ பிரிவில் இலங்கை அணி மட்டுமே தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, குரூப் ஏ பிரிவில் இரண்டாவதாக தகுதி பெற உள்ள அணி யார் என்பதற்கான போட்டியில் நமீபியாவும், அயர்லாந்தும் இன்று ஷார்ஜா மைதானத்தில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதற்கேற்றார் போல தொடக்க வீரர் ஸ்டிர்லிங்கும், கெவின் ஓ பிரையனும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 7.2 ஓவர்களில் 62 ரன்களை குவித்தபோது பிரிந்தனர். ஸ்டிர்லிங் 24 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் கெவின் ஓ பிரையனும் 25 ரன்களில் வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் பால்பிரைன் 21 ரன்கள் எடுத்து எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். தொடக்க வீரர்கள் இருவரும் ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது அயர்லாந்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
16 ஓவர்களில் 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி, அடுத்தடுத்து ஓவர்களில் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. கர்டிஸ் கம்பெர் 4 ரன்களிலம், ஹாரி டெக்டர் 8 ரன்களிலும், நெய்ல் ராக் 5 ரன்களிலும், மார்க் அடெய்ர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்தது.
126 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். அணியின் ஸ்கோர் 25 ரன்களை எட்டியபோது தொடக்க வீரர் கிரெக் வில்லியம்ஸ் 15 ரன்களில் கர்டிஸ் கம்பெர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு 32 பந்தில் 1 பவுண்டரியுடன் 24 ரன்களை எடுத்திருந்த ஜான் கிரீன் 24 ரன்களில் கர்டிஸ் கம்பெர் பந்திலே ஆட்டமிழந்தார். ஆனால், மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜெரார்டு எராஸ்மசும், டேவிட் வைசும் இணைந்து அடுத்து எந்த விக்கெட்டுகளும் விக்கெட்டுகளும் விழாமல் நிதானமாக ஆடினர்.
ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விளாசிய இருவரும், மிகவும் மோசமான பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பவும் மறக்கவில்லை. இறுதியில் 19வது ஓவரிலே நமீபியா அணி 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. கேப்டன் எராஸ்மஸ் 49 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 53 ரன்களை குவித்தார். டேவிட் வைஸ் 14 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்களை எடுத்தார். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி உலககோப்பை வரலாற்றில் முதன்முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்