டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எட்டாவது நாளான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை பதிவு செய்தது. அடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் கடைசி நிமிட த்ரில் வெற்றி பெற்று ஹாட்- ட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இரண்டு, மூன்றாவது ஓவர்களிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. அடுத்து களமிறங்கிய பேட்டர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. டெயில் எண்டர்களான முகமது நபி (35*), குல்பதின் நயிப் (35*) களத்தில் நின்று ரன் சேர்த்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான்.
இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்து போட்டிகளை வென்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அதிரடியான சேஸிங் செய்து போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்த முறை பாகிஸ்தானின் ஸ்டார் ஆசிஃப் அலி. 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது பாகிஸ்தான். 19வது ஓவரை வீசி வந்தார் கரிம் ஜன்னத். ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த ஆசிஃப் அலி முதல் பந்தில் சிக்சர் அடித்தார். இந்த போட்டியில் அவர் களமிறங்கி எதிர் கொள்ளும் முதல் பந்து இது. இரண்டாவது பந்து டாட் பால் ஆனது. மூன்றாவது பந்தில் சிக்சர், நான்காவ்து பந்து டாட். ஐந்து, ஆறாவது பந்துகளில் மீண்டும் சிக்சர்கள்.
ஆசிஃப் அலி அதிரடி:
ஒரே ஓவரில் 24 ரன்களை எடுத்து பாகிஸ்தானின் ஹாட் - ட்ரிக் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டார் ஆசிஃப் அலி. இதனால், சூப்பர் 12 சுற்றில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்று அரை இறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்