இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, முதன்முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


 






நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோருடன் விராட் கோலி  பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 


அதேபோல், மகளிர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பெண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்காக இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் நிடா டாரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


44 பந்துகளில் 64 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் விராட் கோலி இருந்த நிலையில், இந்திய அணி இந்தப் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. 


 






இந்தப் போட்டியில் 64 ரன்கள் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கர் அடித்து இருந்த 3300 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் 3350 ரன்கள் விளாசியுள்ளார். 84 இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 3300 ரன்களை விராட் கோலி தாண்டியுள்ளார். 


அதேபோல், விராட் கோலி ஆட்டநாயகன் விருதை நேற்றைய போட்டியில் வென்று சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை இவர் சமன் செய்துள்ளார். அதாவது ஐசிசி தொடர் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்தியர் என்ற சாதனையை கோலி சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துள்ளார்.