உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
மும்மை வான்கடே மைதானத்தில் நேற்று (அக்டோபர் 24) நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
அதில், 140 பந்துகள் களத்தில் நின்ற குயின்டன் டி காக் 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என மொத்தம் 174 ரன்களை குவித்தார். இதன் மூலம், உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தார்.
ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் 10 அதிகபட்ச ரன்கள்:
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் கப்டில். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 163 பந்துகளில், 24 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 237* ரன்கள் எடுத்தார்.
இரண்டாம் இடத்தில் இருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல். கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 147 பந்துகள் களத்தில் நின்று 10 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் என மொத்தம் 215 ரன்கள் குவித்தார்.
மூன்றாவது இடத்தில் தென்னப்பிரிக்கா வீரர் கேரி கிர்ஸ்டன் இடம் பிடித்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு (United Arab Emirates) எதிரான போட்டியில் இந்த சாதனையை செய்தார். அதன்படி, 159 பந்துகள் களத்தில் நின்ற அவர் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என மொத்தம் 188 ரன்கள் எடுத்தார்.
இந்திய வீரர் சவுரவ் கங்குலி இந்த பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக 158 பந்துகளில் 183 ரன்கள் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் 5-வது இடத்தில் இருக்கிறார். கடந்த 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 125 பந்துகளில் 181 ரன்கள் எடுத்தார்.
டேவிட் வார்னர் இந்த பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரரான அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 133 பந்துகளில் 178 ரன்கள் அடித்தார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், 138 பந்துகளில் 175* ரன்கள் குவித்தார் கபில் தேவ். இதன் மூலம் இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராம போட்டியில் வீரேந்திர சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறார்.
ஒன்பதாவது இடத்தில் 2023 (அக்டோபர் 24) நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்தார் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக். வங்கதேச அணிக்கு எதிரான அந்த போட்டியில், 140 பந்துகளில் 174 ரன்களை குவித்தார்.
ஜிம்பாப்வே அணி வீரர் கிரேக் விஷார்ட் இந்த பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறார். நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் 151 பந்துகளில் 172* ரன்கள் எடுத்தார்.