ICC ODI Ranking: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அஸ்திரேலியா மற்றும் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்துள்ளது.
கிரிக்கெட் போட்டியை சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வெரு அணியும் மற்ற அணிகளை வெல்வது தொடங்கி தொடரை கைப்பற்றுவதுடன் மனதில் உள்ள ஒரு கனவாக இருக்கும் ஒரு இலக்கு என்றால் அது ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். ஐசிசி தரவரிசையில் முதல் இடம் என்பது கிரிக்கெட் போட்டியை சர்வதேச அளவில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.
தொடர் வெற்றிகள் மூலம் தான் ஐசிசி தரவரிசையில் முதலிடம் எட்ட முடியும். அவ்வகையில் இம்முறை இதுவரை வரலாற்றில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் எட்டாத பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போடிகள் கொண்ட தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளையும் வென்று தொடரையும் கைப்பற்றியதுடன் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் பாகிஸ்தான் அணி 5வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் பலமான பாகிஸ்தான் அணி 1992ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று உலகக்கோப்பையை வென்றது. உலககோப்பையையே வென்று இருந்தாலும், பாகிஸ்தான் அணியால் ஒருநாள் தொடரில் முதலிடம் எட்ட முடியவில்லை.
பாகிஸ்தான் அணியின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது அந்த அணியில் உள்ள வீரர்கள் தான் என்றாலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மிகவும் முக்கிய காரணமாக விளங்குகிறார். அதாவது, பாபர் அசாம் அணிக்குள் வந்த பிறகு பாகிஸ்தான் அணியின் போக்கும் வளர்ச்சியும் யாராலும் தடுக்க முடியாததாகிவிட்டது என கூறும் அளவிற்கு உள்ளது. தான் கேப்டனாக பொறுப்பேற்று மிக குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் அணியை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவற்றில் 17 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும், 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி, ஒரு போட்டியில் டிராவும் செய்துள்ளது. ஐசிசியின் புள்ளிவிபரங்களின் படி, 29 போட்டிகளில் விளையாடி 113 ரேட்டிங்குடன் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.
பாகிஸ்தான் அணியைப் போல் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் 113 ரேட்டிங்குடன் இருந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு முதலிடம் வழங்கக் காரணம் பாகிஸ்தான் அணி மிகக்குறைந்த போட்டிகளில் 113 ரேட்டிங்கை எட்டியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா 35 போட்டிகளிலும் இந்தியா 47 போட்டிகளிலும் விளையாடிதான் 113 ரேட்டிங்கை எட்டியுள்ளது. எனவே ஐசிசி பாகிஸ்தான் அணிக்கு முதலிடம் வழங்கியுள்ளது. அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு ஒருநாள் போட்டி என்பதே கிடையாது என்பதால் பாகிஸ்தான்தான் இந்த காலகட்டத்திலும் முதலிடம் வகிக்கும். அதன் பின்னர் தரவரிசைப்பட்டியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.