இங்கிலாந்து  கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson)  40 வயதில் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில்  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். வயதுக்கும் திறமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 40- வயதில் டெஸ்ட் தரவரிசையில் சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். 


6வது முறை:


நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.  கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை (Pat Cummins’) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பர் ஒன் வீரர் பெருமையை அடைவது இது ஆறாவது முறையாகும். 866 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 


தரவரிசையில் 2-ஆம் இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் , 3-ம் இடத்தில் பேட் கம்மின்ஸூம் உள்ளனர்.  1936-ல் கிளாரி கிரிம்மெட் (Clarrie Grimmett) 44 வயதில் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். தற்போது,  40 வயதில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.


ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஸ்பின்னர் பர்ட் ஐயன்மாங்கர்  50 வயதில் நம்பர் ஒன் வீரராக இருந்தார். மிக அதிக வயதில் முதலிடம் பெற்றவர். அடுத்ததாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிச் ஃப்ரீமேன் 41 வயதிலும்,இங்கிலாந்து பந்துவீச்சாளர் சிட்னி பார்ன்ஸ் 40 வயதிலும் முதலிடத்தைப் பிடித்தனர். இப்போது இந்த சாதனை பட்டியில் ஜேம்ஸ் ஆண்டசன்  இணைந்துள்ளார்.


ஆண்டர்சன் டெஸ்ட் விக்கெட்கள் 


ஜேம்ஸ் ஆண்டர்சன்ம் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 682 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியில் 32 முறை 5 மற்றும் 4 விக்கெட்களை எடுத்துள்ளார். மூன்று முறை 10 விக்கெட்களை எடுத்துள்ளார். 


ஜேம்ஸ் ஆண்டசன் கிரிக்கெட் பயணம் : 


2003 ஆம் ஆண்டு ஜிம்பாவேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இங்கிலாந்து கிரிக்கெட் வராலாற்றில் மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களில் ஆஸ்ரேலியாவின் சிறப்பு பந்துவீச்சாளரான க்ளென் மெக்ராத் பின்னுத்தள்ளி 2018 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் முன்னிலை வகித்தார். அப்போதிருந்து இவர்மீது கவனம் ஏற்பட்டது. மேலும், ஜேம்ஸ் ஆண்டசன் சிறப்பானவர் என்று மெக்க்ராத்தும் குறிப்பிட்டுள்ளார்.


பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஸஸ் போட்டியில் மூன்று முறை இங்கிலாந்து வெற்று பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.2017 ஆம் ஆண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை எடுத்தார்.