ஐ.சி.சி. இன்று 2023ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணி, சிறந்த ஆடவர் டி20 அணி என்று அறிவித்தது. இதில், சிறந்த மகளிர் டி20 அணியில் இந்தியாவில் இருந்து தீப்தி சர்மா மட்டுமே இடம்பெற்றார். சிறந்த ஆடவர் அணியில் சூர்யாகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


ஆச்சரியப்படுத்திய உகாண்டா வீரர்:


இதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால், சிறந்த ஆடவர் டி20 அணியில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்திருந்தார். அணியில் இடம்பிடித்த வீரரின் பெயர் அல்பேஷ் ரவிலால் ராம்ஜானி. இவர் 1994ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்தவர்.


29 வயதான இவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர் இதுவரை 35 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 549 ரன்களை குவித்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 78 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல, தனது சுழற்பந்துவீச்சாலும் எதிரணிக்கு சவால் அளித்துள்ளார். 35 டி20 போட்டிகளில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.


சிறப்பான ஆட்டம்:


சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை அல்பேஷ் ராம்ஜானி தன்வசம் வைத்துள்ளார். அவர் ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் மட்டும் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த எகானமியுடன் பந்துவீசுவதே இவரது பெரிய பலமாக உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு போட்ஸ்வானா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி மூலம் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது. அதற்கு இந்த அல்பேஷ் ராம்ஜானியின் பங்கும் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் உகாண்டா அணிக்காக அல்பேஷ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ள சிறந்த ஆடவர் டி20 அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாருக்குமே இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?


மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!