Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானுக்கு பயணிக்க முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


சாம்பியன்ஸ் டிராபி 2025:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. போட்டிகளை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது. அதன்பிறகு, ஒவ்வொரு வடிவிலான கிர்க்கெட் போட்டிக்கும் ஒரு சர்வதேச தொடரை மட்டுமே நடத்த வேண்டும் என கூறி, சாம்பியன்ஸ் டிராபி போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆனால், அந்த முடிவை கடந்த 2021ம் ஆண்டு ஐசிசி ரத்து செய்தது.


பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்திய அணி:


நடப்பு சாம்பியன் என்ற அடிப்படையில் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.  அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் ராஜதந்திர உறவுகள் காரணமாக,  போட்டியில் பங்கேற்பது குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிற்கு பயணிக்க மறுப்பும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்தியா பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மறுத்தால், அதனை கையாளும் விதமாக ஐசிசி புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.


ஐசிசி போட்ட பிளான் ”பி”


ஒருவேளை இந்தியா பாகிஸ்தானிற்கு பயணிக்க மறுத்தால், சில போட்டிகளை மட்டும் வேறுபகுதியில் நடத்த ஏதுவாக சுமார் 65 மில்லியன் டாலர்களை ஐசிசி ஒதுக்கியுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பின்படி,  "பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் ஹோஸ்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் F&CA ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்வு வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்க நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. நிர்வாகமும் செலவு அதிகரிப்பின் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு வெளியே சில போட்டிகளை விளையாடுவது அவசியமானால் நிகழ்வை நடத்துவதற்கான செலவும் இதில் அடங்கும்" என ஐசிசி அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக பாகிஸ்தானில் மூன்று மைதானங்கள் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும், இலங்கையில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவின் போட்டிகள்:


அறிக்கையின்படி, வரைவு அட்டவணை தயாரிக்கப்பட்டு, இந்தியாவின் போட்டிகளை லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேமைதானத்தில் போட்டி நடத்தும் பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்ளும்.  பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா அணி இடம் பெறும். வரைவு அட்டவணையின்படி, மார்ச் 1 ஆம் தேதி பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. அதோடு, பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், பிப்ரவரி 23 ஆம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது.