நியூசிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் விளாசி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய அயர்லாந்து 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 38.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று கைப்பற்றியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் சதம் கடந்த மைக்கேல் ப்ரேஸ்வேல் இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42* ரன்கள் எடுத்தார். அத்துடன் அவர் பந்துவீச்சிலும் 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 






இந்தத் தொடர் வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் பட்டியலில் 5வது  இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடி 50 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணி 12 போட்டிகளில் விளையாடி 125 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.  இங்கிலாந்து அணிக்கு அடுத்தப்படியாக பங்களாதேஷ் அணி 18 போட்டிகளில் விளையாடி 120 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடி 100 புள்ளிகளுடன் உள்ளது. இந்திய அணி 12 போட்டிகளில் விளையாடி 79 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. 


ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் என்றால் என்ன?


ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் என்பது 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் விளையாடும் என்பதை தீர்மானிக்க நடத்தப்படுகிறது. இதில் 12 முழுநேர அணிகளுடன் நெதர்லாந்து அணியும் சேர்ந்து பங்கேற்றுள்ளது. 


இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டை, முடிவு எட்டப்படாத போட்டிகளுக்கு 5 புள்ளிகள் தரப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். கடைசி 5 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண