நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் பலமான அணிகள் என கருதப்பட்ட அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து அணியும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வங்கதேச அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ளா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வங்கதேச அணியின் பந்து வீச்சினை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டினை இழந்து நெதர்லாந்து அணி சரிவினைச் சந்தித்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டு வந்த அணி 63 ரன்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
களத்தில் இருந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது சிறப்பான மற்றும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்தார். அதற்கு பலனும் கிடைத்தது. சிறப்பாக விளையாடி வந்த அவரும் தனது விக்கெட்டினை 68 ரன்னில் இருந்தபோது இழந்து வெளியேறியதால் போட்டி மீண்டும் முழுவதுமாக வங்கதேசத்தின் கட்டுக்குள் சென்றது. நெதர்லாந்து அணி 200 ரன்களை எட்டுவதற்கே பெரும் போராட்டத்தினை செய்யவேண்டி இருந்தது.
இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் சேர்த்தது. வங்கதேசத்தின் தரப்பில் முஸ்தஃபிகுர், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் டஸ்கின் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பில் ஒரு சிக்ஸர் மட்டுமே விளாசப்பட்டது.