செமி பைனல் ஸ்பாட் உறுதி.. இங்கிலாந்தை தூக்கி அடித்த தென்னாப்பிரிக்கா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எளிதில் எட்டி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எளிதில் எட்டி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறையில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட நிலையில், அரையிறுதிக்கான கடைசி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன.
இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு சென்றுவிடலாம் என களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து அடுத்துச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கிய ஃபில் சால்ட் 8 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து, களமிறங்கிய ஜேமி சிமித் டக் அவுட் ஆனார். பின்னர், ஜோடி சேர்ந்த பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், 24 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார் டக்கெட்.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், 37 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். இதையடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.
இறுதியில், 179 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டப்ஸ், டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த வான் டெர் டுசென், கிளாசன் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். 64 ரன்கள் எடுத்திருந்தபோது, கிளாசன் ஆட்டம் இழந்தார்.
இறுதியில், 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எளிதில் எட்டி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.