இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வரலாற்றை உருவாக்கி, முதல் முறையாக 2023 ஐபிஎஸ்ஏ உலக விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் பார்வையற்றோருக்காக நடத்தப்படும் IBSA உலக விளையாட்டு 2023 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெற்ற அரையிற்ய்தி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய அணி பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், புதிய வரலாறு படைக்கும். 


வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா: 


வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை பெற்றது. 145 ரன்களை விரட்டிய இந்திய அணி, 3 ஓவரில் 17 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்ததால், தொடக்கத்தில் தடுமாறியது போல் தோன்றியது. இதையடுத்து சுனில் ரமேஷ் மற்றும் நரேஷ்பாய் பாலுபாய் தும்டா ஜோடி 68 ரன்களை இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது. இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்தது. 


அதனை தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய இந்திய அணி 18 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி அசத்தியது. 






இந்தியா vs பாகிஸ்தான் - இறுதிப்போட்டி


இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் இறுதிப்போட்டியானது இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டியானது மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு போட்டியில் தோற்கடித்தது. இரு அணிகளும் மோதிய அந்த போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த முறை பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பழித்தீர்க்க இந்திய அணி முயற்சிக்கும். 






இந்தியா vs ஆஸ்திரேலியா - இறுதிப்போட்டி மகளிர்: 


இந்திய ஆண்கள் அணியை போன்றே, இந்திய மகளிர் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறது.