ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி புதிய சாதனைப் படைத்துள்ள நிலையில், ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணிகள் பற்றி இச்செய்தியில் காண்போம்.
இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டீல்வன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்பதை நெதர்லாந்து கேப்டன் பின்னர் வருத்தப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு இங்கிலாந்து பேட்டிங் இருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை உற்சாகமாக கொண்டாடிய நெதர்லாந்து அணிக்கு அடுத்து தான் ஆப்பு காத்திருந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த பிலிப்சால்ட் மற்றும் டேவிட் மலான் ஜோடி மைதானத்தின் நான்கு புறமும் பந்துகளை விளாசித் தள்ளியது. குறிப்பாக பிலிப் சால்ட் பவுண்டரிகளாக விளாசி சதமடித்து அசத்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 222 ரன்களை குவித்த நிலையில் 29.4வது ஓவரில் பிலிப் சால்ட் 14 பவுண்டரி 3 சிக்ஸருடன் 122 ரன்களை குவித்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லரும் நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை மிகவும் நோகடித்தார்.
சிக்ஸர்களாக விளாசிய ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடியதால் இங்கிலாந்து அணி 43 ஓவர்களிலே 400 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 407 ரன்களை எட்டியபோது சதமடித்து அசத்தியிருந்த டேவிட் மலான் 109 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 125 ரன்கள் விளாசி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கேப்டன் மோர்கன் டக் அவுட்டாகினார்.
பின்னர், ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டன் சரவெடியாக வெடித்தார். அவர் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசினார். லிவிங்ஸ்டன் அரைசதம் அடித்தார். 49.2 ஓவர்களில் 481 ரன்களை எட்டி தங்களது முந்தைய சாதனையை இங்கிலாந்து சமன்செய்தது. அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை விளாசிய அணி என்ற புதிய உலக சாதனையை படைத்தது. 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்களை விளாசி புதிய உலக சாதனையை படைத்தது.
முதல் 3 இடங்களில் இங்கிலாந்து
இந்நிலையில் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணிகள் பட்டியலில் முதல் 3 இடத்தில் இங்கிலாந்து அணியே இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணிக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது.
அதிக ரன்கள் அடித்த அணி | ரன்கள் | எதிரணி |
இங்கிலாந்து | 498/4 | நெதர்லாந்து |
இங்கிலாந்து | 481/6 | ஆஸ்திரேலியா |
இங்கிலாந்து | 444/3 | பாகிஸ்தான் |
இலங்கை | 443/9 | நெதர்லாந்து |
தென்னாப்பிரிக்கா | 439/2 | வெஸ்ட் இண்டீஸ் |
தென்னாப்பிரிக்கா | 438/9 | ஆஸ்திரேலியா |
தென்னாப்பிரிக்கா | 438/4 | இந்தியா |
ஆஸ்திரேலியா | 434/4 | தென்னாப்பிரிக்கா |
தென்னாப்பிரிக்கா | 418/5 | ஜிம்பாப்வே |
இந்தியா | 418/5 | வெஸ்ட் இண்டீஸ் |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்