நியூசிலாந்தின் மூத்த வீராங்கனை சோஃபி டிவைனின் அபாரமான பேட்டிங்கால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. 


குஜராத் - பெங்களூர் போட்டி


சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் குஜராத் ஜெயன்ட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், சோஃபி டிவைன் 36 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடந்து வரும் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 16வது போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டன. 189 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்தும் நிலையில் களம் இறங்கிய ஆர்சிபி அணியின் இரு தொடக்க ஆட்டக்காரர்களுமே நன்றாக ஆடினர். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 37 ரன்கள் எடுத்தார். டிவைன் கிட்டத்தட்ட கடைசி வரை அதிரடியாக விளையாடி 99 ரன்கள் குவித்தார். 



குஜராத் அணி நிர்ணயித்த கடின இலக்கு


டாஸ் வென்ற சினேகா ராணா ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. சோபியா டன்க்லி 16 ரன்கள் அடித்து சுமாரான தொடக்கம் தர, லாரா வோல்வார்ட் அரைசதம் அடித்தார். அவர் 42 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க, இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளை விரட்டினார். இதைத் தொடர்ந்து சப்பினேனி மேகனா 32 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் இறங்கிய ஆஷ்லே கார்ட்னர் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விரட்ட, 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. இதற்கிடையில், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும், ப்ரீத்தி போஸ் மற்றும் சோஃபி டெவின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: என்னா அடி..! 15 பந்தில் 44 ரன்கள் விளாசல்… பேட்டிங்கில் மிரட்டிய ஷாகின்-ஷா-அப்ரிடி..!


ருத்ரதாண்டவம் ஆடிய டிவைன்


தொடர்ந்து ஆடிய RCB, இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் எடுத்து விக்கெட் எதுவும் இழக்காமல் அதிரடி காட்டினர். ஜெயண்ட்ஸுக்கு எதிரான 189 ரன்களைத் துரத்துவதற்கு இந்த விறுவிறுப்பான தொடக்கம் கைகொடுத்தது. பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்த டிவைன் 36 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரே ஒரு ரன்னில் அதிவேக சதத்தை தவறவிட்ட அவர் அணிக்கு வெற்றியை எளிதாக்கி சென்றார். 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை உள்ளடக்கிய அவரது ருத்ரதாண்டவ ஆட்டத்தால் குஜராத் ஜயண்ட்ஸ் பந்துவீச்சை தவிடுபொடி ஆக்கினார். மந்தனாவும் தனது பங்குக்கு விரைவாக ரன்களை சேர்த்தார். இருப்பினும், அவரால் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. 



லீக் போட்டிகளில் அதிகபட்ச ரன் சேஸ்


அவரது விக்கெட் வீழ்ந்த போதிலும், டிவைன் தனது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்து அதிவேக சதத்தை நெருங்கினார். ஆனால், இறுதியில் 36 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், ஹீதர் நைட் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் RCB யை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெறச் செய்தனர். இதன் மூலம், RCB WPL இல் இரண்டாவது வெற்றியைப் பெற்றது மற்றும் குஜராத் அணி பிளே-ஆஃப்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளைத் தடுத்தது. இதுவே மகளிர் T20 லீக்களில் வெற்றிகரமான அதிகபட்ச ரன் சேஸிங் ஆகும். யார்க்ஷயர் டயமண்ட்ஸ் 2019 இல் சதர்ன் வைப்பர்ஸுக்கு எதிராக 185 ரன்களைத் துரத்தியது முந்தைய அதிகபட்ச சேஸ்-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.