இந்திய அணி:
ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி தோல்வியை தழுவியது. அதேநேரம் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இச்சூழலில், தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி அங்கு தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அங்கு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், டிசம்பர் 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டிசம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இறுதியாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரையும், ஜனவரி 3 முதல் 7ஆம் தேதி வரையும் நடைபெறும். முன்னதாக, டி 20 போட்டிக்கு சூர்யகுமார் யாதவ், ஒரு நாள் போட்டிக்கு கே.எல்.ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ரோஹித் சர்மாவிற்கு பிறகு யார் கேப்டன்?
இச்சூழலில், டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு பிறகு யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரோஹித் சர்மாவிற்கு பிறகு டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், “மிகவும் நீண்ட கால பார்வையில் சுப்மன் கில் சரியானவராக இருப்பார். ஆனால் தற்போதைக்கு அவர் டெஸ்ட் கேப்டனாக பொருந்தமாட்டார். எனவே எதிர்காலத்தைப் பற்றி பேசும் போது அந்த பதவிக்கு ரிஷப் பண்ட் சரியானவராக இருக்கலாம்.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 24 காரட் தங்கம். எனவே அவரும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவிக்கு போட்டியிடும் வீரர்களில் ஒருவராக இருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேம் சேஞ்சராக இருக்கிறார். எனவே ரோஹித் சர்மா விடை பெற்றால் இந்த இருவரில் ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக நியமிக்கலாம்” என்று கூறியுள்ளார்.