இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக அசத்திய பிறகு இந்தத் தொடரில் ஒரு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா ஜொலித்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா இந்தத் தொடருக்கு பின்பு நேற்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு நாளும் நான் ஃபிட்டாக ஆக வேண்டும் என்று எண்ணினேன். அத்துடன் என்னுடைய நாட்டிற்காக திரும்ப விளையாட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 2019ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வருவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் அவர் 2021ஆம் ஆண்டு மீண்டும் பயிற்சியை தொடங்கியதும் இடம்பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். முதல் தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதன்பின்னர் அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றார். அதன்பின்னர் இங்கிலாந்து தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்