IPL Hardik Pandya: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக, விரைவில் ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


ஹர்திக் பாண்ட்யா..!


கடந்த 2015ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூலம், ஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். அதிரடியான பேட்டிங், உதவிகரமான வேகப்பந்துவீச்சின் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணிக்கான சர்வதேச போட்டிகளிலும் அறிமுகமானார். நாளடைவில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திர ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். தற்போது இந்திய டி-20 அணியின் கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். 


மீண்டும் மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா?


இந்நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ம் ஆண்டு குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு முன்புவரை, 7 ஆண்டுகள் மும்பை அணியின் நட்சத்திர வீரராக ஹர்திக் பாண்ட்யா திகழ்ந்தார். ரோகித் சர்மாவிற்கு பிறகு மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனவும் எதிர்பார்ப்புகள் நிலவியது. ஆனால், 15 கோடி ரூபாய் ஊதியத்தில் அவர் குஜராத் அணிக்கு தாவினார். இந்நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாகவும், ஐபிஎல் டிரேடிங் முறையில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மும்பை - குஜராத் பேச்சுவார்த்தை என்ன? 


cash -only trade என்ற விதியின் அடிப்படையில் பாண்ட்யா உடனான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மும்பை அணி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மும்பை அணி 15 கோடி ரூபாய் வழங்க வேண்டியது இருக்கும். ஆனால்,  அந்த அணியிடம் கைவசம் வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக இஷான் கிஷன் (ஏலத்தொகை - ரூ. 15.25 கோடி) மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் (ஏலத்தொகை - ரூ.8 கோடி) ஆகியோரை அந்த அணி விடுவிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுமுனையில் கேமரூன் கிரீன் உள்ளிட்ட இரண்டு வீரர்களை, டிரேடிங் முறையில் மும்பையிடம் இருந்து பெற குஜராத் அணி ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரர்களை டிரேடிங் முறையில் மாற்றிக்கொள்வதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைவதால், நாளை மால இறுதி முடிவுகள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாண்டியாவின் எதிர்காலம் என்ன?


கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இனி விளையாடுவாரா என்பதும் சந்தேகம். இதனால், அவரது ஐபிஎல் எதிர்காலமும் நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்பில்லை. எனவே, 36 வயதான ரோகித் சர்மாவிற்கு மாற்றாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நீண்ட கால கேப்டன் தேவைப்படுகிறார். இதனை கருத்தில் கொண்டே அவருக்கு மாற்றாக ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்க அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை டிரேடிங் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து மும்பை அணிக்கு பாண்ட்யா வந்தாலும், இந்தாண்டு அவர் ரோகித் சர்மாவிற்கு கீழ் தான் விளையாட வேண்டி இருக்கும்.


பாண்ட்யாவின் செயல்பாடு:


குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு என்பது மிகவும் மேம்பட்டுள்ளது. அணியை திறம்பட செயல்படுத்தி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு திறமையான பினிஷராக கருதப்படும் ஹர்திக், 123 போட்டிகளில் 2309 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 145 என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சிலும் 53 விக்கெட்டுகளை சேர்த்துள்ளார்.