2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பேட்ச் நேற்று நியூயார்க் சென்றுள்ளது. அந்த முதல் பேட்சில் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கிளம்பினர். ஆனால் ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் இன்னும் அமெரிக்காவிற்கு கிளம்பவில்லை. 


கிடைத்த தகவலின்படி, இந்த மூன்று வீரர்களும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக அடுத்த பேட்ச்சில் செல்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஹர்திக் பாண்டியா அமெரிக்கா செல்வாரா.? 


கடந்த 2 நாட்களுக்கு மேலாக ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் நடாஷா ஸ்டான்கோவிச்சும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இதுகுறித்து இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இதுவரை வரவில்லை. 


இந்தநிலையில், நடாஷா அவரது நெருங்கிய நண்பருடன் வெளியே சுற்றிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது, அவரிடம் நீங்களும் ஹர்திக் பாண்டியாவும் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்வி எழுப்பியபோது அந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா இதுவரை நியூயார்க் நகரத்திற்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. 


ஹர்திக் - நடாஷா: 


நடாஷா ஸ்டான்கோவிச்சும் ஹர்திக் பாண்டியாவும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக, மும்பையில் நடந்த பார்ட்டியின்போது இருவரும் சந்தித்துள்ளனர். அன்று முதல் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் காதலாக மாறி பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தற்போது விவாகரத்து செய்யும் சூழல் நிலவி வருகிறது. இருவருக்குமிடையே என்ன பிரச்சனை? ஏன் உறவு முறிவு? என எந்த காரணமும் தெரியவில்லை. இதுகுறித்து ஹர்திக் பாண்டியாவும் இதுவரை எந்த அறிக்கையில் வெளியிடவில்லை. 


விராட் கோலி ஏன் செல்லவில்லை..? 


ஐபிஎல் 2024 எலிமினேட்டரில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேறியது. இருப்பினும், விராட் கோலி அமெரிக்கா செல்லும் முதல் கிரிக்கெட் வீரர்களின் பேட்ச்சில் இடம்பெறவில்லை. 


ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜ், ரோஹித் சர்மாவுடனான முதல் பேட்சில் பறந்தார். நட்சத்திர வீரர் விராட் கோலி வருகின்ற மே 30ம் தேதி நியூயார்க் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்தியா - வங்கதேசம் இடையே நடக்க உள்ள பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. அதேபோல், சஞ்சு சாம்சன் எப்போதும் அமெரிக்கா செல்வார் என்பதும் தெரியவில்லை. 


கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் பாண்டியா!


கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் ஹர்திக் பாண்டியா. நடப்பு ஐ.பி.எல். சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி அவருக்கு சம்பளமாக ரூ.15 கோடி தருகிறது. இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியாவிற்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. மேலும், விளம்பரங்கள் மூலம் கோடிகளை சம்பாதிக்கிறார். 


இவர்கள் இருவரும் விவாகரத்து ஒருவேளை பெற்றால், ஹர்திக் பாண்டியா தனது சொத்தில் இருந்து 70% சொத்துகளை ஜீவனாம்சமாக தர வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இருப்பினும், ஹர்திக் பாண்டியா தான் வாங்கிய பெரும்பாலான சொத்துகளை தனது தாயில் பெயரில் வாங்கியுள்ளதால், நடாஷாவின் ஜீவனாம்ச கோரிக்கை எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.