இந்திய அணியின் டெஸ்ட் பேட்ஸ்மேன் சேட்டேஷ்வர் புஜாரா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் தவிர்க்க முடியாத பெயர் புஜாரா. இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வாரிசாக பார்க்கப்பட்டவர். 






டெஸ்ட் வாழ்க்கை:


2010ல் இந்திய அணிக்காக அறிமுகமான புஜாரா, இதுவரை 98 டெஸ்டில் 44.4 சராசரியில் 7065 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையில், அவர் 19 சதங்கள் மற்றும் 34 அரை சதங்களையும் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று இரட்டைச் சதங்களும் அடித்துள்ளார். இது தவிர, புஜாரா உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 52.94 சராசரியில் 18,000 ரன்களுக்கு மேல்  எடுத்துள்ளார்.


ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக பந்துகளை விளையாடிய இந்திய வீரர் புஜாரா:


டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை விளையாடிய இந்திய வீரர் புஜாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற ராஞ்சி டெஸ்டில் 202 ரன்கள் எடுக்க 525 பந்துகளை எதிர்கொண்டார். இதற்கு முன் இந்த சாதனை அவரது முன்னோடியான ராகுல் டிராவிட் பெயரில் சாதனையாக பதிவாகி இருந்தது. டிராவிட் 2004ல் பாகிஸ்தானுக்கு எதிராக 495 பந்துகளை எதிர்கொண்டு 270 ரன்கள் எடுத்திருந்தார். 


முதல் இரட்டை சதம்: 206 எதிராக இங்கிலாந்து, அகமதாபாத் டெஸ்ட் (2012)


கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேட்டேஷ்வர் புஜாரா தனது  முதல் இரட்டை சதத்தை விளாசினார். புஜாராவின் 206 ரன்களால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 521 ரன்கள் குவித்தது.  ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிரேம் ஸ்வான் போன்ற ஜாம்பவான்களை எதிர்கொண்டு புஜாராவின் திறமையும் இந்தப் போட்டியில் வெளிப்பட்டது. புஜாராவின் இரட்டை சதத்தால் இந்தியா வெற்றி பெற்றது.


கபா டெஸ்ட்: 2021 


பார்டர்-கவாஸ்கர் தொடரின் 2020-21 தொடரின் 4-வது டெஸ்டில் இந்தியாவுக்கு முன் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சவாலான இலக்கை நிர்ணயித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அவுட் ஆனபோது, ​​​​கில் உடன் இணைந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் புஜாரா. 


இந்த டெஸ்டில் புஜாரா 211 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தை உடல் முழுவதும் வாங்கி கொண்டார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. கபா மைதானத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற டெஸ்ட் வெற்றியில் புஜாரா முக்கிய பங்கு வகித்தார்.


அதிக டெஸ்ட் ரன்களை அடித்த எட்டாவது இந்திய பேட்ஸ்மேன்: 


இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் புஜாரா 8வது இடத்தில் இருக்கிறார். 



  • முதல் இடம் - சச்சின் டெண்டுல்கர் (15,921)

  • இரண்டாம் இடம் - டிராவிட் (13,265)

  • மூன்றாம் இடம் - கவாஸ்கர் (10,122)

  • நான்காம் இடம் - லக்ஷ்மனன் (8,781)

  • 5ம் இடம் - சேவாக் (8,503)

  • 6ம் இடம் - விராட் கோலி (80,94)

  • 7வது இடம் - கங்குலி (7,212)

  • 8வது இடம் - புஜாரா (7,014)