இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபி காலிறுதி போட்டியில் மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டிக்கு பிறகு, ஆந்திர பிரதேச அணியின் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி தன்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்காக அம்மாநில கிரிக்கெட் சங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். 


ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆந்திரா பிரதேச அணியின் கேப்டனாக சீசனை தொடங்கிய விஹாரி, போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்திற்கு பிறகு தனது கேப்டன் பதவியை துறந்தார். இதையடுத்து, ஆந்திரா அணியின் கேப்டன் பொறுப்பு ரிக்கி புய்யிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, விஹாரி டாப் - ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தா.


இந்தநிலையில், ரஞ்சி டிராபி போட்டியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து விஹாரி, அவரை கேப்டன் பதவியில் இருந்து வேண்டுமென்றே நீக்கியதாக ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத்தை கடுமையாக சாடி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆந்திரா அணியில் இருந்து உடனடியாக விலகுவதாகவும் அறிவித்துள்ளார். 






இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், “ நாங்கள் கடைசி வரை கடுமையாக போராடினோம். ஆனால், எங்களால் வெற்றி பெறமுடியவில்லை. ஆந்திர அணி மீண்டும் ஒரு காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. 


இந்தப் பதிவு நான் முன்வைக்க விரும்பும் சில உண்மைகளைப் பற்றியது. பெங்கால் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான் கேப்டனாக இருந்தேன். அந்த ஆட்டத்தின் போது நான் 17 வது வீரரைக் கத்தினேன், அவர் தனது அப்பாவிடம் (அரசியல்வாதி) புகார் செய்தார். பதிலுக்கு அவரது அப்பா என் மீது நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்திடம் கேட்டார். இருப்பினும், கடந்த ஆண்டு இறுதிப் போட்டியாளர்களான பெங்கால் அணிக்கு எதிராக நாங்கள் 410 ரன்களை சேஸ் செய்தோம். அந்த வீரரிடம் நான் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை.


கடந்த ஆண்டு எனக்கு வலது கையில் அடிப்பட்டபோது கூட இடது கையில் பேட் செய்து ஆந்திரா அணிக்காக விளையாடினேன். ஆனால், என்னை விட அந்த வீரர்தான் முக்கியம் என்று சங்கம் நினைத்தது. ஒரு கேப்டனாக கடந்த 7 ஆண்டுகளில் ஆந்திராவை 5 முறை நாக் அவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளேன். இந்தியாவுக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன்.


கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதும் எனக்கு தர்ம சங்கடம் ஆனது. இருப்பினும்இந்த சீசனில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஒரே காரணம் நான் விளையாட்டையும் எனது அணியையும் எவ்வளவு மதித்தேன் என்ற ஒரே காரணத்திற்காகதான். 


இதில், மோசமான விஷயம் என்னவென்றால், வீரர்கள் எதைச் சொன்னாலும் கேட்க வேண்டும் என்று சங்கம் நினைக்கிறது. அவர்களுக்கும் தன்மானம் இருக்கிறது. கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதும் அவமானமாகவும் வெட்கமாகவும் உணர்ந்தேன். ஆனால் இன்று வரை நான் அதை வெளிப்படுத்தவில்லை.


இதையடுத்து, என் சுய மரியாதையை இழந்து ஆந்திராவுக்காக நான் ஒருபோதும் விளையாட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். இருந்தாலும் ஆந்திர அணியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும், நாம் வளரும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் சங்கம் நாங்கள் வளர விரும்பவில்லை” என தெரிவித்திருந்தார்.