டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி வென்ற பிறகு கேப்டன் ரோகித் சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


டி20 கேப்டன் யார்?


இதனால், இனி வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய இந்திய அணியை டி20 போட்டிகளில் காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாகவே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. அபிஷேக் சர்மா, ரியான் பராக், சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் என முற்றிலும் இளம் வீரர்களாக களமிறங்கினர்.


இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்த ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கம்பீர் சொன்னது என்ன?


இந்த சூழலில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் யாரை கேப்டனாக நியமிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில், பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் பணிச்சுமை யாருக்கு இருக்காதோ அவரையே கேப்டனாக நியமியுங்கள் என்று கூறியதாகவும், குறிப்பிட்டு யார் பெயரையும் குறிப்பிட்டு கேப்டனாக நியமிக்க கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.


ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யாவை கடுமையாக விமர்சித்த ரசிகர்கள், நெட்டிசன்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினை தெரிய வந்த பிறகும், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல அவர் தொடர் முழுவதும் முக்கிய பங்காற்றியதை கண்ட பிறகும் அவருக்கு முழு ஆதரவை சமூக வலைதளங்களில் வழங்கி வருகிறார்கள். இதனால், கேப்டன்சியை அவரிடமே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.


இணையத்தில் மல்லுகட்டு:


மேலும், கேப்டன்சி விவகாரத்தை முன்வைத்து சூர்யகுமார் யாதவ் – ஹர்திக் பாண்ட்யா ரசிகர்கள் இணையத்தில் மோதி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில், இன்று மாலை இலங்கைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.