இந்திய கிரிக்கெட் அணியின் (ஆடவர்) தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக புதிய பயிற்சியாளராக பிசிசிஐ யாரை நியமனம் செய்ய உள்ளது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. 


அதேநேரம், உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்த உள்ளூர் நபரையே, புதிய பயிற்சியாளராக தேர்வு செய்ய பிசிசிஐ விரும்பியது. அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீரை, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டியது.


இதற்கிடையே, புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலையும் பிசிசிஐ நடத்தி முடித்தது. கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) நடத்திய நேர்காணலில், கவுதம் கம்பீர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி. ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள ஜெய் ஷா, "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. மாறிவரும் சூழலை கவுதம் கம்பீர் அருகில் இருந்து பார்த்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை சகித்துக்கொண்டு, பல்வேறு பாத்திரங்களில் சிறந்து விளங்கியதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கவுதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன்.


 






இந்திய அணி பற்றிய அவரது தெளிவான பார்வை, அவரது பரந்த அனுபவம் ஆகியவை பயிற்சியாளர் பாத்திரத்திற்கு அவரை சிறந்த தேர்வாக்குகிறது. புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.