உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் கோலி டெஸ்ட் கேப்டன்சி தொடர்பாக, பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


குவியும் விமர்சனங்கள்:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்று 2 நாட்கள் ஆன பிறகும் கூட விமர்சனங்கள் இன்னும் குறையவில்லை. ரசிகர்கள் சமூக வலைதளபக்கங்களில் பல புள்ளி விவரங்களை போட்டு, ஒவ்வொரு வீரரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் செயல்பாட்டின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவருமே கூறும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு ஐபிஎல் தொடர். ஐசிசி தொடர்களை காட்டிலும் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிக கவனம் செலுத்துவதாகவும் சாடி வருகின்றனர். 


அதிருப்தியை ஏற்படுத்திய கங்குலி:


இந்திய அணி முக்கியம் என்றால் ஐபிஎல் தொடரை விட்டுவிடுங்கள். பணம் தான் முக்கியம் என்றால் இந்திய அணியை விட்டுவிடுங்கள் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி இருந்தார். பலரும் ஐபிஎல் தொடர்பான பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐசிசி தொடரை காட்டிலும் ஐபிஎல் தான் பெரியது என கங்குலி பேசி இருப்பது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.


ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் - கங்குலி


தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கங்குலியிடம் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கபட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்த இடத்திற்கு ரோகித் தான் சரியான நபராக எங்களுக்கு தோன்றினார். ரோகித் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரும், தோனியும் தலா 5 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளனர். கடினமான தொடர் என்பதால் ஐபிஎல் தொடரை வெல்வது எளிதானது அல்ல. உலகக் கோப்பையை வெல்வதை காட்டிலும் ஐபிஎல்லை வெல்வது கடினமானது. இதில் 14 போட்டிகளுக்குப் பிறகு தான் நீங்கள் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.  ஆனால், உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல 4-5 போட்டிகள் மட்டுமே தேவை. ஐபிஎல்லில், நீங்கள் சாம்பியன் பட்டம் வெல்ல 17 போட்டிகள் தேவை” என கங்குலி கூறினார்.


”கோலி தான் சொல்லனும்”


டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியது குறித்தான கேள்விக்கு “விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை விராட் கோலி மட்டுமே விளக்க முடியும். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவதில் அர்த்தமில்லை” என கங்குலி பதிலளித்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்த கோலி, கடந்த 2022ம் ஆண்டு தேன்னாப்ரிக்காவிற்கு எதிரான தோல்விக்குப் பிறகு, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, பிசிசிஐ நிர்வாகத்திற்கும் விராட் கோலிக்கும் இடையே ஏதோ மோதல் நிலவுவதாக பல்வேறு தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.