இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு காலத்திலும் புதிய தலைமுறை வீரர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும். அதாவது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு தரமான வீரர்களை தொலைநோக்கு பார்வையுடன் கண்டெடுக்க வேண்டிய கட்டாயம் பி.சி.சி.ஐ.க்கு எப்போதும் உள்ளது.


எதிர்கால இந்திய அணி:


இந்த நிலையில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட்கோலி, ரோகித்சர்மா, ரஹானே, புஜாரா ஆகியோர் தங்களது கிரிக்கெட் அத்தியாயங்களின் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவர்களது இடத்திற்கு புதிய வீரர்களை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகியுள்ளது.


அந்த வகையில், இந்திய அணியின் எதிர்கால நோக்கை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறக்கப்பட்டுள்ள வீரர்கள்தான் ஜெய்ஸ்வால், சுப்மன்கில், இஷான்கிஷான்.


ஜெய்ஸ்வால்:


உத்தரபிரதேசத்தில் பிறந்த 2 கே கிட்-ஆன ஜெய்ஸ்வால் கடந்து வந்த பாதை வேறு எந்த வீரரும் கடந்து வராத அளவிற்கு மிக கடினமானது ஆகும். பானிபூரி விற்று தன்னுடைய அபார பேட்டிங் திறனால் ஐ.பி.எல். தொடரில் அசத்தி தற்போது இந்திய அணிக்காகவும் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.


அறிமுக டெஸ்ட் போட்டியிலே அந்நிய மண்ணிலே அபாரமாக ஆடி முதல் இன்னிங்சிலே 171 ரன்களை குவித்து தன்னுடைய தேவையை ஆழமாக உணர வைத்துள்ளார். இடது கை வீரராக தொடக்க வீரரான இவர் நிதானமாகவும், அதிரடியாகவும், நேர்த்தியான ஷாட்களும் ஆடுவதில் வல்லவராக இருக்கிறார். கிடைத்த முதல் வாய்ப்பையை அருமையாக பயன்படுத்தியுள்ள ஜெய்ஸ்வால், இனி வரும் காலங்களிலும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


சுப்மன்கில்:


அடுத்த விராட்கோலி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சுப்மன்கில். விராட்கோலியுடன் இவரை ஒப்பிடுவது தற்போது தவறு என்றாலும், எதிர்காலத்தில் இவர் விராட்கோலியை போல பல சாதனைகளை படைப்பார் என்று ரசிகர்களும், பி.சி.சி.ஐ.யையும் பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.


ஒருநாள், டி20, டெஸ்ட், ஐ.பி.எல். என அனைத்து வடிவத்திலும் சதம் விளாசி தன்னுடைய முக்கியத்துவத்தை ஏற்கனவே உணர்த்தியுள்ள சுப்மன்கில் தொடக்க வீரராக நன்றாக அசத்தியுள்ளார். இந்திய அணியின் எதிர்கால தொடக்க வீரராக சுப்மன்கில் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


இஷான்கிஷான்:


இடது கை வீரர் அதிரடி பேட்ஸ்மேனாக பட்டையை கிளப்புபவர் இஷான்கிஷன். ரிஷப்பண்டிற்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ள இஷான்கிஷான், அவரது வருகைக்கு பிறகும் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும் 1 இரட்டை சதம், 1 சதம் மற்றும் 3 அரைசதங்கள் விளாசியுள்ளார்.


மிக அதிரடியான பேட்டிங் மூலம் ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்ட இஷான்கிஷான் எதிர்கால இந்திய அணியின் மிக முக்கிய வீரராக திகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அவருக்கு பி.சி.சி.ஐ. மேலும் பல வாய்ப்புகள் அளிக்கும் என்றும் நம்பலாம்.


ரிங்குசிங்:


கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். எத்தனையோ அதிரடி பேட்ஸ்மேன்களை கண்டிருந்தாலும், தோனியை போல ஒரு ஃபினிஷரை பார்த்ததே இல்லை. பொல்லார்ட், டி விலியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் பல முறை ஃபினிஷராக இருந்தாலும் ஒரு அன்கேப் வீரர் அதாவது சர்வதேச கிரிக்கெட் ஆடாத ஒரு வீரர் ஃபினிஷராக அசத்தியது என்றால் அது கடந்த ஐ.பி.எல்.தான். அந்த வீரர் ரிங்குசிங்.


மிக நெருக்கடியான சூழலில் களமிறங்கி மிகவும் நிதானமாக களத்தில் நின்று அதிரடியாக ஆடி சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை சாதகமாக்குவதில் கில்லாடியாக திகழ்பவர் ரிங்குசிங். இவரது ஃபினிஷிங் திறமையை தோனியுடன் ஒப்பிடுவது மிகை என்றாலும் இவர் களத்தில் காட்டும் நிதானமே இவரை தோனியுடன் ஒப்பிடுவதற்கு காரணம் ஆகும். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி கொல்கத்தாவை வெற்றி பெற வைத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். ஜெய்ஸ்வால், சுப்மன்கில், இஷான்கிஷான் ஆகியோர் தொடக்க வீரராக இருக்கிறார்கள். ஆனால், ஃபினிஷிங் வரிசையில் தோனிக்கு நிகரான ஒரு வீரரை இன்னமும் இந்திய அணி கண்டுபிடிக்கவில்லை. அந்த இடத்தை ரிங்குசிங் நிரப்புவார் என்று ரசிகர்கள் முழு மனதாய் நம்புகின்றனர்.


பந்துவீச்சு பலவீனம்:


ரோகித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி கட்டமைக்கப்பட உள்ள நிலையில் அந்த அணியில் ஸ்ரேயாஸ், ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மன்கில், இஷான்கிஷான், ரிங்குசிங், ருதுராஜ் கெய்க்வாட் என்று பேட்டிங்கிற்கு நிறைய பட்டாளங்கள் இருந்தாலும் பந்துவீச்சு நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.


ஆல் ரவுண்டர் ஜடேஜா சுழலில் அசத்தினாலும், வேகப்பந்துவீச்சில் தற்போதுள்ள சூழலில் முகமது சிராஜ் தவிர வேறு யாரும் கவனிக்கும் வகையில் செயல்படவில்லை. முகமது ஷமி, புவனேஸ்வர்குமார் 30 வயதை கடந்துள்ள நிலையில், பும்ராவும் காயத்தில் அவதிப்படுகிறார். இதனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் மிக மிக அவசியம் ஆகும்.


இந்திய அணியின் வருங்கால பேட்டிங்கிற்கு பெரிய படையே இருந்தாலும், பந்துவீச்சு கவலைக்குரிய வகையிலே உள்ளது என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இதனால், இந்திய அணியின் இளம்படையை கட்டமைக்கும் முன்பு பந்துவீச்சு படையை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.