ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் நேற்று (ஆகஸ்ட்-22) தனது 49 வயதில் காலமானதாக செய்திகள் வெளியாகியது. நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன்:


ஹீத் ஸ்ட்ரீக், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜிம்பாப்வே அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்பட்ட, உலக கிரிக்கெட்டிலும் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். 






சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 216 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு இன்னிங்ஸில் 16 முறை 4 விக்கெட்டுகளையும், ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 7 முறையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 


சிறந்த ஆல்ரவுண்டர்:


டெஸ்ட் போட்டிகளையும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் சிறந்து விளங்கிய அவர், 29.82 சராசரியில் 239 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சில் ஒரு இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,  ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை செய்துள்ளார். 






பேட்டிங் ரெக்கார்ட்: 


ஹீத் ஸ்ட்ரீக் பேட்டிங்கை பொறுத்தவரை அவர் டெஸ்டில் 1990 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2943 ரன்களும் எடுத்துள்ளார். ஸ்ட்ரீக் டெஸ்டில் 1 சதம் மற்றும் 11 அரை சதங்கள் அடித்துள்ளார். அதே சமயம், ஒருநாள் போட்டிகளில் 13 அரைசதம் அடித்துள்ளார்.


ஹீத் ஸ்ட்ரீக் கேப்டன்சி சாதனை: 


கடந்த 2000 ஆம் ஆண்டில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ஹீத் ஸ்ட்ரீக்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக நியமித்தது. ஸ்ட்ரீக்கின் தலைமையின் கீழ், ஜிம்பாப்வே 21 டெஸ்ட் போட்டிகளில் 4ல் வென்று, 6 போட்டிகள் டிரா ஆன நிலையில், 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.






ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இவர், 18 போட்டிகளில் வென்றுள்ளது. 47 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஸ்ட்ரீக்கின் மரணத்திற்குப் பிறகு, இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட பல முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் ட்வீட் மூலம் அவர் மறைந்ததாக எண்ணி இரங்கல் தெரிவித்து வந்தனர். 






இந்தநிலையில், தான் இறந்ததாக பரவும் செய்தி முழுக்க முழுக்க பொய் என ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “இது முழுக்க முழுக்க வதந்தி மற்றும் பொய். நான் உயிருடன் இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன், யாரோ ஒருவர் சொன்னதை சரிபார்க்காமல் கூட அது செய்தியாக பரவுகிறது என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், இந்த செய்தியால் நான் புண்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.