BCCI: கேப்டன் கில்லை தொடர்ந்து ஆல்-ஃபார்மெட் வீரராக ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பளிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Continues below advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, வரும் 19ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோகித் மற்றும் கோலி அணிக்கு திரும்பினாலும், கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித்தை நீக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மையப்படுத்தி தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மீது கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Continues below advertisement

ஹர்ஷித் ராணாவிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கவனத்தை ஈர்த்த ஹர்ஷித் ராணா, ஆண்டின் இறுதியில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அடுத்தடுத்து அறிமுகமானார். அதேநேரம், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு அவரால் சோபிக்க முடியவில்லை. ஆனாலும், இந்திய அணியின் அனைத்து தொடருக்கான வீரர்கள் பட்டியலும், அவரது பெயர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஆல்-ஃபார்மெட் ப்ளேயராகவே அனைத்து போட்டிகளிலும் அவரது பெயர் அடிபட்டு வருகிறது. ஆச்சரியப்படும் அளவிற்கோ அல்லது அட்டகாசமாகவோ செயல்படாத நிலையில் அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதே தற்போது ரசிகர்க்ளின் கேள்வியாக உள்ளது.

பொங்கி எழுந்த ஸ்ரீகாந்த்

வீரர்களின் தேர்வு குறித்து பேசிய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், “திடீரென்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருக்கிறார், அடுத்த நிமிடமே காணாமல் போகிறார். ஒரே ஒரு நிரந்தர உறுப்பினர் மட்டுமே இருக்கிறார் - ஹர்ஷித் ராணா. அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.  சில வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் அவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. ஆமாஞ் சாமி சொல்லும் ஹர்ஷித் ராணா போன்றேரே அணியில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

2027 உலகக் கோப்பையை நோக்கி நீங்கள் முன்னேறத் தொடங்க வேண்டும். ஆனால் நீங்கள் செய்வது அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மத்தியில் சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்தால், நீங்கள் கோப்பைக்கு குட்பாய் செல்ல வேண்டியது தான்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

ஜடேஜா உங்களுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜா?

ஆஸ்திரேலியாவின் சூழலுக்கு அதிகப்படியான சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்படமாட்டார்கள் என குறிப்பிட்டு, ஜடேஜா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். அதேநேரம், முழுநேர சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டும் அணியில் இருக்க, சுழற்பந்து ஆல்-ரவுண்டர்ளாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வுக்குழுவின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் வீரரான சடகோபன் ரமேஷ், ஜடேஜா என்ன உங்களுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜடேஜாவிற்கு குட்பாயா?

வீரர்களின் தேர்வு குறித்து தனது யூட்யூப் சேனலில் பேசிய சடகோபன் ரமேஷ், “சாம்பியன்ஸ் டிராபிக்கு கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்ததால்தான் ஜடேஜா அணியில் இருந்தார் என்று அகர்கர் கூறுகிறார். அவர் கூடுதல் சுமையா? அவர் வெள்ளை பந்து போட்டிகளில் லெஜண்ட். கூடுதல் வீரர்கள் தேவைப்படும்போது மட்டும் ஜடேஜாவை அணியில் தேர்ந்தெடுப்பீர்களா? சுப்மான் கில்லை டி20ஐ துணைக் கேப்டனாகவும் ஒருநாள் போட்டி கேப்டனாகவும் நியமித்ததற்கு நீங்கள் கொடுக்கும் நிலையான பதில் இங்கிலாந்தில் அவரது செயல்திறன்தான். அதே இங்கிலாந்து தொடரில், ஜடேஜாவும் பிரகாசித்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜா ஒரு சதம் அடித்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போட்டியில் 100 ரன்கள் எடுத்ததற்காக துருவ் ஜூரலுக்கு ஒருநாள் போட்டி வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். ஆனால் ஜடேஜாவை வீட்டிற்கு அனுப்புகிறீர்கள்” என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.