நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா அணிக்காக விளையாட தயாராகி வருகிறார்.
கனடாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும், வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் கொண்டு டி20 உலகக் கோப்பைக்கு அமெரிக்கா கிரிக்கெட் தயாராகி வருகிறது. இந்தநிலையில், வருகின்ற ஏப்ரல் 7ம் தேதி ஹூஸ்டனில் தொடங்கவுள்ள கனடாவுக்கு எதிரான தொடருக்கான அணியை அமெரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
கோரி ஆண்டர்சனுக்கு இடம்:
கனடாவுக்கு எதிரான தொடருக்கான 15 பேர் கொண்ட அமெரிக்க அணியில் கோரி ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக விளையாடிய கோரி ஆண்டர்சன், அதன்பிறகு 2020ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். அன்றுமுதல் அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டு டி20 போட்டிகளில் ஆண்டர்சன் சிறப்பாக விளையாடி வருகிறார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் 146 ஸ்டிரைக் ரேட்டுடன் 28 இன்னிங்ஸ்களில் 900 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட்டில் (MLC) MI நியூயார்க்கிற்கு எதிராக 94 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே, கனடாவிற்கு எதிரான டி20 போட்டியில் அமெரிக்கா அணிக்காக கோரி ஆண்டர்சன் இடம் பிடித்தார்.
உன்முக்த் சந்த் -க்கு இடம் இல்லை:
இந்திய அண்டர் 19 முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த், தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டெடுக்க, அமெரிக்காவிற்கு சில ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்தார். அவரும் அமெரிக்க டி20 அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடம்பெறவில்லை. உள்நாட்டு லீக்கில் கடந்த மூன்று சீசன்களில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அவருக்கு அமெரிக்க அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆனால், முன்னாள் இந்திய அண்டர் 19 வீரர் ஹர்மீத் சிங் மற்றும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி வீரர் மிலிந்த் குமார் ஆகியோர் கனடா அணிக்கு எதிரான அமெரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், கனடா அணியின் முன்னாள் கேப்டன் நிதிஷ் குமார் கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். இந்தநிலையில், நிதிஷ் குமார் தனது முன்னாள் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
கனடா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அமெரிக்க அணியில் கேப்டனாக மோனாங்க் படேலும், துணை கேப்டனாக ஆரோன் ஜோன்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அணி:
மோனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), கோரி ஆண்டர்சன், கஜானந்த் சிங், ஜெஸ்ஸி சிங், சவுரப் நேத்ரவல்கர், நிசார்க் படேல், ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கவுஸ், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், நோஸ்டுஷ் கென்ஜிஜ், மிலிந்த் குமார் , நிதிஷ் குமார், உஸ்மான் ரபிக்